விமர்சனம்

லத்தி – திரைப்பட விமர்சனம்

கதாநாயகர்கள் காவல்துறை வேடம் ஏற்கிறார்கள் என்றால் உயரதிகாரி வேடமாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் உதவி ஆய்வாளராகவாவது வருவார்கள். ஆனால், காவல்துறையின் மிக அடிநிலையில் இருக்கும் காவலர் வேடத்தில் நடித்திருக்கிறார் விஷால்.

இடைநீக்கம் செய்யப்பட்ட காவலராக தாடி மீசையுடன் ரொம்ப அப்பாவியாக வருகிறார் விஷால். இடைநீக்கம் இரத்து செய்து மீண்டும் வேலையில் சேரும்போது காட்டும் துடிப்பு வேலையில் காட்டும் ஈடுபாடு ஆகியனவற்றில் தேர்ச்சி பெறுகிறார் விஷால்.

விஷாலின் மனைவியாக வருகிறார் சுனைனா. அமைதியான அழகு மனைவி. நடுத்தர வர்க்கப் பெண்களைப் பிரதியெடுத்திருக்கிறார்.

விஷாலின் மகனாக வரும் சிறுவன் லிரிஷ்ராகவ், கவனம் ஈர்க்கிறார். அவருடைய பாத்திரப்படைப்பு சிறுவர்களுக்கு நல்ல பாடம் எடுக்கப் பயன்பட்டிருக்கிறது.

வில்லனாக வரும் மலையாள நடிகர் சன்னி பார்வையிலேயே மிரட்டுகிறார்.அடியாளாக வரும் வினோத்சாகர், முரட்டு வில்லனாக வரும் ரமணா ஆகியோர் பொருத்தம்.

பிரபு, தலைவாசல் விஜய், முனீஷ்காந்த்,இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் காவல் அதிகாரிகளாக வருகிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் திரைக்கதையை நகர்த்துவதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது.

பாலசுப்பிரமணியெம், பாலகிருஷ்ணா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள் மிரட்டலாக அமைந்திருக்கின்றன.

யுவனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் கதைக்குப் பலம் சேர்க்கிறது.

படத்தின் இன்னொரு நாயகன் போல் இருக்கிறார் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர்ஹெயின்.

எழுதி இயக்கியிருக்கிறார் வினோத்குமார். எவ்வித அதிகாரமும் இல்லாத எல்லோருக்கும் அடிபணியக் கூடிய காவலர், சென்னையிலுள்ள மொத்த ரவுடிகளையும் திட்டமிட்டு அழிக்கிறார் என்கிற பெரியகதை. முதலில் விஷால் பயந்து ஓடுவதுபோல் காட்டிவிட்டு பின்பு எல்லாம் அவருடைய திட்டம் என்று சொல்லியிருப்பது சுவாரசியம்.

மிக நீண்ட சண்டைக்காட்சிகளுக்கு இடையே குழந்தை மாட்டிக் கொள்வதும் அதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக விஷால் பேசுவதும் படபடப்பூட்டும் காட்சிகள்.

நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள் நிறைந்திருந்தாலும் பிற்பாதியில் வரும் சண்டைக்காட்சிகள் அவற்றில் விஷாலின் உழைப்பு ஆகியன பிரமிக்க வைக்கின்றன.

நேர்மையான காவல்துறையினரைப் பெருமைப்படுத்தும் படம்.

Related Posts