விமர்சனம்

நட்பே துணை – திரைப்பட விமர்சனம்

கிரிக்கெட், கபடி ஆகிய விளையாட்டுகளை மையமாக வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. இப்போது ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது நட்பே துணை.

நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக உள்ள ஓரிடத்தை பன்னாட்டு நிறுவனமொன்றிற்குத் தாரை வார்க்க அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன.

அதை எளிய மனிதர்கள் ஒன்று கூடி முறியடிக்கிறார்கள். அது எப்படி? என்பதுதான் கதை.

ஜாலியான பையன், காதலுக்காக பெண் பின்னால் சுற்றும் வாலிபன், பொறுப்பான ஹாக்கி அணித் தலைவர் ஆகிய வேறுபட்ட பொறுப்புகளைச் சுமந்து அதற்குப் பொருத்தமாக நடிக்க முயன்றிருக்கிறார் நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

அவருடைய நடிப்பும் பல காட்சிகளும் மீசைய முறுக்கு படத்தை நினைவு படுத்துகின்றன.

நாயகி அனகா, சின்ன டவுசரைப் போட்டுக் கொண்டு ஹாக்கி மட்டையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரிரு பாடல் காட்சிகளில் அவருக்கு உடை மாற்றி விட்டிருக்கிறார்கள். இந்தக்கதையில் அவருக்குப் பெரிதாக வேலையில்லை.

புதுச்சேரி விளையாட்டுத்துறை அமைச்சர் வேடம் ஏற்றிருக்கும் கரு.பழனியப்பன், சகட்டு மேனிக்கு தற்கால தமிழக அரசியலையும் ஆட்சியாளர்களையும் கிழித்துத் தொங்கப்போடுகிறார்.

பன்னாட்டு நிறுவன அதிகாரி இந்தியிலேயே பேச தூய தமிழில் பேசி அவருக்குப் பதிலடி கொடுக்கும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.

ஹாக்கி பயிற்சியாளராக நடித்துள்ள ஹரிஷ் உத்தமன், கரு.பழனியப்பன் உதவியாளராக நடித்துள்ள சுட்டி அரவிந்த், இன்னொரு பயிற்சியாளர் இளங்கோ குமரவேல், ‘எரும சாணி’ புகழ் விஜய், ‘புட் சட்னி’ ராஜ்மோகன், விக்னேஷ், பிஜிலி ரமேஷ், கெளசல்யா, பாண்டியராஜன் உட்பட படத்தில் நிறையப் பேர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களில் ஹரீஷ்உத்தமனும் அந்தத் தாத்தாவும் கவனிக்க வைக்கிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடல்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியும் வேகமாகவும் இருக்கின்றன. ‘வேங்க மவன் ஒத்தையில’ பாடல் வரிகள் நன்றாக இருந்தாலும் தெளிவாகக் கேட்கமுடியவில்லை.

அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் ஹாக்கி விளையாட்டுக்காட்சிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.

விளையாட்டு தெரியாதவர்களும் ரசிக்கிற மாதிரி தொகுத்திருக்கிறார் ஃபென்னி ஆலிவர்.

இயக்குநர் பார்த்திபன் தேசிங்குக்கு இது முதல்படம். ஆனால் அது எந்த இடத்திலும் தெரியாமல் தேர்ந்த இயக்குநர் போல் எடுத்திருக்கிறார்.

கதைக்குள் நுழையும் வரை சலிப்பூட்டும் இடங்கள் இருந்தாலும் மையக்கதைக்குள் நுழைந்தவுடன் எடுக்கும் வேகம் இறுதிவரை குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர். இடைவேளைக் காட்சி சுவாரசியம்.

அரசியல்வாதியை வில்லனாக வைத்ததை வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தத் தேர்தல் நேரத்துக்குப் பொருத்தமாக, காசு வாங்காம நல்லவங்களுக்கு ஓட்டுப் போடுவீங்களா? என்கிற வசனத்தோடு படத்தை முடித்திருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

படத்தின் பெயரைப் போலவே நண்பர்கள் துணையுடன் தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

Related Posts