இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் – திரைப்பட விமர்சனம்
தென்தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளைக் கதை மாந்தர்களாக வைத்துக் கொண்டு உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அலசி ஆராய்ந்து துவைத்துத் தொங்கப்போட்டிருக்கும் படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.
நாயகன் மிதுன்மாணிக்கம், நாயகி ரம்யாபாண்டியன் ஆகிய இருவரும் பெற்ற பிள்ளைகள் போல் வளர்க்கும் கறுப்பன் வெள்ளையன் ஆகிய இரு காளை மாடுகள் திடீரெனக் காணாமல் போகின்றன.
இந்த மாடுகள் காணாமல் போனதால் தமிழ்நாடு அரசாங்கத்துக்கே அவப்பெயர். ஏன்? எப்படி? என்பதைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார்கள்.
மிதுன்மாணிக்கம் வேடத்துக்கு மிகப்பொருத்தம். ரம்யாபாண்டியனை சோகமே உருவாகக் காட்டி அவருடைய இரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்திவிட்டார்கள்.
ஊடகவியலாளராக நடித்திருக்கிறார் வாணிபோஜன். தற்கால சூடு சொரணையுள்ள ஊடகவியலாளர்களின் பிரதிநிதியாக அவருடைய வேடம் அமைந்திருக்கிறது.
நாயகனின் நண்பர் மண் தின்னி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற வடிவேல்முருகன் வாயைத் திறந்தாலே அரசியல்தான். மிக அலட்சியமாக மிகப்பெரிய விசயங்களைப் பேசிக் கடந்து செல்கிறார்.
அப்பத்தா முதல் அனைத்துக் கதாபாத்திரங்களையும் பார்க்கும்போதே ஆசையாக இருக்கிறது. தன்னந்தனியாகக் குளம் வெட்டும் பெரியவர் கண்களைக் குளமாக்குகிறார்.
இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரை நினைவுபடுத்தும் வேடங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
சீமான் தோற்றத்தில் வருகிறவர் பேசும்போது அரங்கம் அதிர்கிறது.
சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் கதையோடு பயணிக்கிறது.
கிரிஷ் இசையமைத்திருக்கிறார். பாடல்வரிகளில் சமுதாய அக்கறையும் சமுதாய விமர்சனங்களும் நிறைந்திருக்கின்றன.
குக்கிராமத்துச் சந்தைகள் வரை ஊடுருவிவிட்ட மார்வாடிகளைக் காட்டி எச்சரிக்கும் அதேநேரத்தில், இந்தி தெரியாது போடா என வேகமாகச் சொல்லி, இது தமிழ்நாடுடா என்று உரத்துச் சொல்லியிருக்கிறது படம்.
கதாபாத்திரங்களும் அதற்குப் பொருத்தமான நடிகர்களும் கூர்மையான வசனங்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருப்பதும் இயக்குநர் அரிசில் மூர்த்தியின் பலங்கள்.
இப்படத்தைத் தயாரித்திருக்கும் சூர்யா ஜோதிகா ஆகியோரின் துணிச்சலைப் பாராட்டலாம்.











