விமர்சனம்

வெப்பன் – திரைப்பட விமர்சனம்

மனித சக்திகளைத் தாண்டி பன்மடங்கு அதீத சக்தி கொண்ட கதாபாத்திரங்கள் ஆங்கிலப்படங்களில் அதிகம் இடம்பெறுகின்றன.அதுபோல் அதீத சக்தி கொண்ட ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவரைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதையைக் கொண்ட படம் வெப்பன்.

வெப்பன் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில் ஆயுதம் என்று பொருள்.இந்தப்படத்தின் ஆயுதம் அதீத சக்தி கொண்ட சத்யராஜ்.
அவருக்கு அதீத சக்தி வந்தது எப்படி? என்று விளக்க ஹிட்லர் கால ஜெர்மனிவரை சென்று வருகிறார்கள்.

இப்போது தேனி மாவட்டத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை இருவேறு குழுக்கள் தேடிவருகின்றன. அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.

திரையில் வரும் நேரம் குறைவென்றாலும் அழுத்தமான வேடம் அமைந்திருக்கிறது சத்யராஜுக்கு. அதற்கேற்ற உடலமைப்பும் நடிப்பும் கொடுத்திருக்கிறார்.அவர் வரும் காட்சிகள் ஒப்பீட்டளவில் அதிகம் இரசிக்க வைக்கின்றன.அவருடைய திரைப்பயணத்தில் இந்த வேடம் முக்கியமானதாக இருக்கும்.

சத்யராஜைத் தேடிச் செல்லும் யூடியூபராக நடித்திருக்கிறார் வசந்த்ரவி.அவருக்கும் நடிக்க ஒன்றுக்கு இரண்டு வாய்ப்புகள். சரியாகச் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப்புக்கு குறைவான வாய்ப்பு.அதிலும் தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கிறார் இராஜீவ்மேனன்.புதியதாகச் சொல்லவேண்டுமென நினைத்து எழுதப்பட்டிருக்கும் அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.

யாசிகா ஆனந்த், கனிகா,கஜராஜ், பரத்வாஜ்ரங்கன்,வேலுபிரபாகரன் உள்ளிட்டு நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.அவரவருக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரபுராகவ்வின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குத் தக்க அமைந்திருக்கிறது. கிடைத்த இடைவெளிகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சி இலகுவாக்குகிறார்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை இயக்குநரின் எண்ணங்களுக்கு இசைய அமைந்து படத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறது.

கோபிகிருஷ்ணாவின் படத்தொகுப்பு கொஞ்சம் மாறுபட்டு இருந்திருக்கலாம்.

திரைக்கதையில் இருக்கிற தொய்வுகள் சலிப்பை ஏற்படுத்துவது பெரும் பலவீனம்.

ஏற்கெனவே வந்திருக்கிற பாதுகாப்பான கதைகளுக்குள் பயணிக்காமல் இரசிகர்களுக்கு மாறுபட்ட திரையனுபவத்தைக் கொடுக்க வேண்டும் எண்ணிய வகையில் இயக்குநர் குகன் சென்னியப்பன் பாராட்டுக்குரியவர்.

– குமரன்

Related Posts