புஷ்பா 2 படம் மீது நம்பிக்கை இல்லையா? தமிழ் வியாபார முறையால் கேள்வி
2021 இல் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றன.
படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று,இப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல்பாகம் தமிழ்நாட்டிலும் பெரும் வெற்றி பெற்றது என்பதால் இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே அளவு வியாபாரம் இருக்கிறதா என்றால்? இல்லை.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
என்ன விலை?
பொதுவாக இதுபோன்ற வெற்றிப் படங்கள் எம் ஜி எனப்படும் குறைந்தபட்சப் பாதுகாப்பு வகையில்தான் வியாபாரம் செய்யப்படும்.
அதன்படி இந்தப் படத்தின் தமிழ்நாடு உரிமை விலை சுமார் அறுபது கோடி என்று பட நிறுவனம் கூறியதாம். அவ்வளவு விலை கொடுக்க யாரும் முன்வரவில்லை.
எனவே, விஜய்யின் கோட் படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையைப் பெற்றதற்குக் கைமாறாக இந்தப் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார்கள். இது டிஸ்டிரிபியூசன் முறையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எம் ஜி இல்லாமல் டிஸ்டிரிபியூசன் முறையில் இந்த வியாபாரம் நடந்ததே ஆச்சரியம் எனும்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாடெங்கும் இப்படத்தை டிஸ்டிரிபியூசன் முறையிலேயே பிரித்துக் கொடுத்திருக்கிறது.
சென்னை செங்கல்பட்டு ஆகிய விநியோகப் பகுதிகளில் ஏஜிஎஸ் நிறுவனமே வெளியிடுகிறது.
கோவைக்கு மன்னார், மதுரைக்கு குணா, சேலத்துக்கு செண்பகமூர்த்தி, திருச்சிக்கு ஜிடி, திருநெல்வேலிக்கு பிரதாப் என்று கொடுத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.
இவை அனைத்தும் விநியோக முறையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால், ஒரு பெரு வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது விநியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
அதேசமயம் செண்பகமூர்த்தி உட்பட பெரும்பாலானோர் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தைச் சேர்ந்தோர் என்பதால் இப்படத்துக்கு நிறைய திரையரங்குகள் கிடைக்கும் என்றும் படம் நன்றாக இருந்தால் பட நிறுவனம் எம் ஜி அடிப்படையில் விற்றதைவிடப் பெரிய அளவில் சம்பாதிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.











