விமர்சனம்

பாப்பிலோன் – திரைப்பட விமர்சனம்

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் கொடூரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக ஒரு நாயகன், அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் பாப்பிலோன்.

நாயகன் ஆறு.ராஜா தாடியுடன் இருப்பது வசனங்கள் உச்சரிப்பது ஆகியனவற்றால் பழைய டி.ராஜேந்தரை நினைவு படுத்துகிறார். சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில் மிகையாகவும் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்துள்ள ஸ்வேதாஜோயல். வெறுமனே பாடலுக்கு மட்டும் வந்து போகாமல் கதையுடன் பயணிக்கிற வேடம் அவருக்கு. அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.

நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் செளமியா, தற்கால இளம்பெண்களின் பிரதிநிதி போல் இருக்கிறார். அழகாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரெனப் புயல் அடிக்கிற நேரத்தில் அவரது நடிப்பு நன்று.

பண்ணையார் பூ இராம், நாயகனின் அம்மா ரேகா சுரேஷ் ஆகியோர் நிறைவாக நடித்து வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். பூ இராமின் மகளாக வருகிற அபிநயா போல் பெண்கள் இருந்துவிட்டால் நல்லது.

கல்லூரி வினோத் சிரிக்க வைக்க உதவுகிறார், மறைந்த கிருஷ்ணமூர்த்தி கலங்க வைக்கிறார்.

அருள்செல்வனின் ஒளிப்பதிவில் திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் அழகு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஷ்யாம் மோகனின் இசையில் பாடல்கள் நன்று. அழகிய காதல் பாடல், பெண்களின் வலி சொல்லும் பாடல், பெண்களின் பெருமை சொல்லும் பாடல் ஆகியன ரசிக்க வைக்கின்றன.

நவீன கைபேசிகளால் இளம்பெண்களுக்கு ஏற்படும் விபரீதங்கள், சாமானியர்கள் அதை எதிர்கொள்ளும் அவலம் ஆகியனவற்றைச் சொல்வதோடு நில்லாமல் அதிகாரத் திமிரில் அட்டகாசம் செய்பவர்களை இப்படித்தான் செய்யணும் என்கிற வெகுமக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிற மாதிரி படமெடுத்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ஆறு.ராஜா.

பாப்பிலோன் – பார்க்கலாம்.

Related Posts