விமர்சனம்

ஆர் ஆர் ஆர் – திரைப்பட விமர்சனம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடக்கும் கதை. படம் தொடங்கியவுடனே ஒரு பழங்குடி இனத்துச் சிறுமியை அவர்கள் அனுமதி இல்லாமலே இழுத்துச் சென்றுவிடுகிறார்கள் ஆங்கிலேயர்கள். அச்சிறுமியை மீட்க வருகிறார் ஜூனியர் என் டி ஆர். 

அதேநேரம் ஆங்கிலேயர்களிடம் உண்மையாக வேலை செய்யும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகிறார் ராம்சரண். 

சிறுமியை மீட்டுப்போக ஒருவன் வந்துவிட்டான் என்றதும் அவனைப் பிடித்துக்கொடுத்தால் சிறப்பு அதிகாரி பதவி என ஆளுநரின் மனைவி அறிவிக்கிறார். அவரைப் பிடிக்கும் பொறுப்பை ராம்சரண் ஏற்கிறார்.

இவற்றுக்கிடையே எதிரெதிர் துருவங்களாக இருக்கும் ஜூனியர் என் டி ஆரும் ராம்சரணும் ஒருவருக்கொருவர் யாரெனத் தெரியாமலேயே உற்ற நண்பர்களாகிறார்கள்.

அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரின் அறிமுகக் காட்சிகள் எல்லாக் கதாநாயகர்களையும் பொறாமைப்பட வைக்கும் அளவுக்கான காட்சிகள்.

அவ்விருவரும் இந்தப்படத்தில் எந்த அளவுக்கு உழைக்கத்தயாராக இருக்கிறோம் என்பதை அறிமுகக்காட்சிகளிலேயே காட்டிவிடுகிறார்கள். 

அதன்பின் எல்லாமே யூகிக்கக் கூடிய திரைக்கதைதான் என்றாலும் காட்சிகள் பிரமிப்பாக அமைந்திருக்கின்றன,
ராம்சரண் நெருப்பு என்றும் ஜூனியர் என் டி ஆர் நீர் என்றும் அறிமுகம் செய்கிறார்கள். படம் முழுக்க அதைக் காட்சிகளில் கடைபிடித்திருக்கிறார்கள்.

இடைவேளைக்கு முன்பான ஒரு சண்டைக்காட்சியில் ராம்சரண் பின்னணியில் வெடிபொருட்கள் வெடித்து நெருப்புக் கோளம் இருக்கிறதென்றால் அதே இடத்தில் ஒரு நீரூற்று உடைந்து ஜூனியர் என் டி ஆர் பின்னணியில் நீர்க்கோளப் பிரவாகம். இதுபோன்ற பல காட்சிகள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.

ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் ஆகிய இருவருமே வேடத்தைப் புரிந்து நடித்திருக்கிறார்கள். எப்போதும் மிடுக்காக இருக்கிறார் ராம்சரண்.அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு ஆர்ப்பரிக்கிறார் ஜூனியர் என் டி ஆர். 

இருவரும் சண்டைக்காட்சிகளில் வியக்கவைக்கிறார்கள். நடனக் காட்சிகளில் சிலிர்க்க வைக்கிறார்கள். இருவரில் ராம்சரணைவிட ஒருபடி உயர்ந்து நிற்கிறார் ஜூனியர் என் டி ஆர். நாட்டு நாட்டு பாடலில் ராம்சரண் கஷ்டப்பட்டு ஆடிக்கொண்டிருக்க மிக அலட்சியமாகவும் இயல்பாகவும் நடனமாடி அசத்துகிறார் ஜூனியர் என் டி ஆர்.

படத்தில் ராம் சரணுக்கு இணை இந்திநடிகை ஆலியாபட், ஜூனியர் என் டி ஆருக்கு இணை ஒலிவியா மோரிஸ். இருவருக்கும் அதிக வேலையில்லை. 

அஜய்தேவ்கன் சிறிதுநேரம் வருகிறார், நன்றாகச் செய்திருக்கிறார். லோட், எய்ம், சூட் என அவர் இடும் ஆணைகள் சண்டைக்கானவை மட்டுமன்று.சின்ன வேடமொன்றில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.  

மரகதமணியின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.

படத்தின் பெரும்பலமே ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார் தான். ஒவ்வொரு காட்சியிலும் உயர்ந்திருக்கிறார். ஒரு நொடியில் தோன்றிமறையும் காட்சியின் வடிவமைப்புக் கூடச் சிறப்பாக இருக்கிறது.

பெரிய கதாநாயகர்களை எப்படிக் கையாளவேண்டும் என்பது இயக்குநர் ராஜமெளலிக்கு அத்துபடியாகியிருக்கிறது. ஆனால் படம் முழுக்கவே அப்படி இருப்பது பலவீனம்.

ஆங்கிலேயர் எதிர்ப்பு எனும் கதையை வைத்துக்கொண்டும் தேசப்பற்று, பக்தி ஆகிய பொது ஒழுக்கவிதிகளை வைத்துக்கொண்டும் காவிக்குக் கால் பிடித்திருக்கிறார் ராஜமெளலி.

எப்போதும் துப்பாக்கியோடு இருக்கும் காவலதிகாரி ராம்சரணுக்குக் குதிரை, வில் அம்புகளோடு புழங்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜூனியர் என் டி ஆருக்கு துள்ளுந்து எனும் முரண்கள் இரக்கும்படி அமைந்திருக்கின்றன.

எல்லாவற்றையும் தாண்டி திரைப்படம் என்பது இயக்குநர்களின் ஊடகம், காட்சி ஊடகம் ஆகிய புரிதல்களோடு படமெடுத்திருப்பது அவருடைய பலம்.இரசிகர்களுக்குக் காட்சி விருந்து.

Related Posts