September 14, 2026
விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

வாழ்க்கைப் பயணத்தின் போது சில நேரங்களில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவர்களாக அமைந்துவிடுவார்கள் என்பதை நாசர் கதாபாத்திரத்தை முன்வைத்து ஒரு தெளிந்த நீரோடையின் ஓட்டம் போலச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர் விஷால்வெங்கட்.

நாசர்தான் படத்தின் நாயகன். அவருடைய அறிமுகத்தில் தொடங்கி அவர் சொல்லும் அறிவுரையில் படம் முடிகிறது.

இடையில்,
 
படத்தில், நாசர் மகனாக நடிக்கும் அசோக் செல்வன், நாசரின் சொந்தமகன் படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் மகனாக நடித்திருக்கும் அபிஹாசன்,  அற்பனுக்கு வாழ்வு வந்தால் எனும் சொல்லுக்கு எடுத்துக்காட்டாக வரும் பிரவீன்ராஜா நான் நல்லாத்தானே வேலை செய்யறேன் எனக்கு ஏன் முன்னேற்றமே இல்லை எனப்புலம்பும் ஏராளமானோரின் பிரதிநிதியாக வரும் மணிகண்டன்
ஆகியோர் வாழ்க்கையில் நாசர் கதாபாத்திரம் ஏற்படுத்தும் தலைகீழ்மாற்றம்தான் படம்.

நாசர் நுட்பமான உடல்மொழிகளுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் வாழ்க்கையை எப்படி அணுகவேண்டும்? என்பதற்கான பாடங்கள்.

நான் சொல்றத மட்டும் கேளு, நான் சொன்னேனே கேட்டியா? என கோபப்பட்டுக் கொண்டேயிருக்கிறார் அசோக்செல்வன். சில இடங்களில் இயல்பாகவும் சில இடங்களில் செயற்கையாகவும் இருக்கிறது.

அசோக்செல்வனின் இணையாக வரும் ரியா, கதாநாயகிகளுக்குரிய இலக்கணத்தில் இல்லையெனினும் பொருத்தமான நடிப்பின் மூலம் கவனிக்க வைத்திருக்கிறார்.

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரின் மகன் எனும் அடையாளத்தோடு திரைப்பட நாயகனாக அறிமுகமாகும் அபிஹாசன், பணக்காரத் திமிரைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறார்.
திரையுலகில் புதிதாக நுழைபவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறும் நேரத்தில், நான் தப்பே செய்யல ஆனாலும் ஏன் இப்படி? எனக் கொதிக்கும் காட்சிகள் மற்றும்,
கண்கலங்கற சீனெல்லாம் இங்க இல்ல என்று அலட்சியமாகச் சொல்வது,அடுத்த காட்சியிலேயே, ப்ளீஸ் என்னை நம்புங்க என்று கலங்கி அழுவது ஆகியவற்றின் மூலம்என்னாலும் எல்லாவகையிலும் நடிக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்.

அவருக்கு இணையாக வருகிற அஞ்சுகுரியனை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம்.

படத்தின் வசனங்களை எழுதியிருப்பதோடு முக்கிய வேடத்திலும் நடித்திருக்கும் மணிகண்டன் நன்று. ஒரு
வேலையை முழுதாகச் செய்யாமலேயே உலகத்தைக் குற்றம் சொல்லாதீர் என்பதை உரத்துச் சொல்லியிருக்கிறார்.

பிரவீன்ராஜா, ரித்விகா ஜோடியும் பொருத்தமாக நடித்து  பலம் சேர்க்கிறார்கள்.

இளவரசு, பானுப்பிரியா,கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரின் அனுபவ நடிப்பு அருமை.

கே.மெய்யேந்திரனின் ஒளிப்பதிவு, நடுத்தரக்குடும்ப வீட்டையும் பணக்கார பங்களாவையும் அதனதன் அளவில் அழகாகக் காட்டுகிறது.அதேபோலக் கதாபாத்திரங்களையும் படம்பிடித்து பலம் சேர்த்திருக்கிறது.

ரதனின் இசையில் பாடல்கள் உருகவைக்கின்றன. பின்னணி இசை இளகவைக்கிறது.

படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இயக்குநர் விஷால்வெங்கட், நேர்த்தியான திரைக்கதை அமைக்க மெனக்கெட்டிருக்கிறார். கொஞ்சம் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இடம்கொடுத்திருக்கலாம்.
பிரவீன்ராஜா ரித்விகா இணையரின் தொடர் சண்டை, மரணவீட்டில் அசோக்செல்வன், ரியா ஆகியோரின் சண்டை ஆகியனவற்றைத் தவிர்த்திருக்கலாம்.
மாறுபட்ட பல்வேறு கதாபாத்திரங்களைக் கையாள்வதிலும் நடிகர்களிடம் நடிப்பை வாங்குவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். 

இன்றைய இளம்தலைமுறை அவசியம் பார்க்கவேண்டிய படம்.

Related Posts