October 25, 2021
விமர்சனம்

விநோதய சித்தம் – திரைப்பட விமர்சனம்

ஒரு பெரிய நிறுவனத்தில் உயரதிகாரி வேலை, வீடு, மகிழுந்து, வேலையாட்கள் என வசதியான வாழ்க்கை. அன்பான மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் கொண்ட நல்ல குடும்பம். மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார்.

இவ்வளவு வசதிகளும் கொண்ட தம்பிராமய்யாவுக்கு 25 ஆவது திருமண நாள் கொண்டாடுவதற்கு முந்தைய இரவு விபத்து காரணமாக மரணம் நேருகிறது. 

மரணத்திலிருந்து மீண்டும் குறிப்பிட்ட நாட்கள் உயிரோடு வாழ ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. 

அந்த நாட்களில் என்னவெல்லாம் நடக்கிறது? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதுதான் திரைக்கதை.

பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் தம்பிராமய்யாவுக்கு இந்தப்படம் இனிவரும் காலங்கள் எல்லாம் பெயர்பெற்றுத்தரும் படமாக இருக்கும். வசன உச்சரிப்பு, உடல்மொழி என எல்லா வகையிலும் ஏறி அடித்திருக்கிறார்,ஓரிடத்தில் மகிழுந்து ஓட்டுநரிடம் வேகமாக ஓட்டு என்பார் தம்பிராமய்யா, அதற்கு அவர் திடீரென யாராவது குறுக்கே வந்துவிட்டால்? எனும்போது சட்டென குறுக்கே வர்றவனே இங்கேதான் இருக்கான் நீ ஓட்டு என்பார். பார்ப்போர் கைதட்டிச் சிரிக்காமல் இருக்கமுடியாது. இம்மாதிரி டைமிங் எனப்படும் சூழலுக்கேற்ப அவர் பேசும் வசனங்கள் சிறப்பு.

முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி பேசுகிற ஒவ்வொரு சொல்லும் வாழ்க்கைப்பாடம். அலட்டாமல் பதறாமல் சிதறாமல் உதடுகளை மட்டுமே அசைத்து அவர் பேசுகிறார். கேட்போர் பார்ப்போர் உடல்களும் உள்ளங்களும் ஆடிப்போகின்றன.

ஸ்ரீரஞ்சனி, சஞ்சிதாஷெட்டி, தீபக்,ஹரிகிருஷ்ணன்,ஜெயபிரகாஷ்,ஷெர்லினா,முனிஸ்காந்த் உள்ளிட்ட அனைவரும் அவரவர் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

சஞ்சிதா ஷெட்டி மிக இயல்பாக நடித்திருக்கிறார். அதற்குக் காரணம், படத்தில் அவருக்கு நிகழ்பவை அவரது தம்பிக்கே நடந்தவையாம்.

புதுநடிகை ஷெர்லினா, மாமனார் தம்பிராமையாவைப் பார்த்ததும் பயப்படுவது போல நடிக்கிறார்.அதற்குப் பின்னர் வரும் காட்சிகள் வாய்விட்டுச் சிரிக்கவைக்கின்ற காட்சிகள்.

வசனங்களை விஜி எழுதியிருக்கிறார். உன் வாழ்க்கையிலேயே நீ ஒரு பார்வையாளன் தான் என்பது போன்ற பல ஆழமான, கூர்மையான வசனங்கள் படத்தில் இருக்கின்றன. அவை படத்தை வெகுமக்கள் படமாக்குகின்றன.

சத்யாவின் இசை படத்துக்குப் பெரும்பலம். காண்போரின் உள்ளத்துடிப்புக்கேற்ப பின்னணி அமைத்திருக்கிறார்.

ஏற்கெனவே வெளியான ஒரு நாடகத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி.

மிக மிக சுவாரசியமான முடிச்சைக் கொண்ட திரைக்கதையை அமைத்திருப்பதும், கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் உடல்தானம், காதல் திருமணம், பிறர்க்கு உதவுதலே பெருமை ஆகிய நற்கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருப்பது சமுத்திரக்கனியின் பிம்பத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் அம்சம்.

தன்னம்பிக்கை, உழைப்பே உயர்வு தரும், முயற்சி திருவினையாக்கும் ஆகிய கருத்துகளைப் பின்னுக்குத்தள்ளி நீ என்ன வேணாலும் நினைக்கலாம் ஆனால் உனக்கு என்ன கொடுப்பது என்பதைக் கடவுள்தான் முடிவு செய்வார் என நம்பவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று.

Related Posts