September 7, 2024
விமர்சனம்

மார்க் ஆண்டனி – திரைப்பட விமர்சனம்

எவ்வளவு கோடி கொடுத்தாலும் முடிந்துபோன ஒரு நோடியைக்கூட திரும்பப்பெற முடியாது எனும்போது, இறந்தகாலத்திற்குத் திரும்பிப்போனால் எவ்வ்ளவு நன்றாக இருக்கும்? என்கிற அதீத ஆசையை கற்பனையாக நிகழ்த்திக்காட்டி மக்களை ஈர்க்கும் உத்திதான் காலப்பயணக்கதைகள்.

அதில் இன்னும் ஒருபடி மேலே போய், தொலைபேசி மூலம் காலப்பயணம் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மார்க்ஆண்டனி.

விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவருமே இரட்டைவேடங்களில் நடித்திருக்கிறார்கள். இருவரும் அப்பா மகனாகவே நடித்திருக்கிறார்கள்.

மார்க் ஆகவும் ஆண்டனியாகவும் நடித்திருக்கிற விஷால், இரண்டு வேடங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் காட்டியிருக்கிறார்.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும்.

மிகைநடிப்புக்குப் பெயர்போன எஸ்.ஜே.சூர்யா, இந்தப்படத்திலும் அதையே செய்திருக்கிறார்.கதைக்களம் பொருத்தமாக அமைந்துவிட்டதால் அது சிறந்த நடிப்பாகிவிட்டது. பெரும் வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக ரிதுவர்மா. மசாலா படங்களில் கதாநாயகிகளின் நிலை என்னவோ அதுதான் இந்தப்படத்தில் அவருடைய நிலை.

தெலுங்குநடிகர் சுனில் வில்லனாக நடித்திருக்கிறார். நகைச்சுவைக்காக ரெடின்கிங்ஸ்லி.

இன்னொரு நாயகி அபிநயா, விஞ்ஞானியாக வரும் செல்வராகவன், நிழல்கள் ரவி ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் இராமானுஜம், கதை நடக்கும் 80, 90 காலகட்டங்களைக் காட்சிப்படுத்த மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.எண்ணங்களில் மட்டுமின்றி. வண்ணங்களிலும் மாற்றம் செய்து மகிழ வைக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் தாழ்வில்லை. பின்னணி இசைக்காகக் கூடுதல உழைப்பைச் செலுத்தியிருக்காறார்.

இரண்டு அப்பாக்கள் இரண்டு மகன்கள் உள்ளிட்டு ஏராள நடிகர்கள், நிகழ்காலம் இறந்தகாலம் என காலமாற்றங்கள் ஆகிய குழப்பமூட்டும் விசயங்கள் இருந்தாலும் படத்தொகுப்பாளர் விஜய்வேலுகுட்டி, எல்லோரும் புரிந்துகொள்ளும்படி படத்தைத் தொகுத்திருக்கிறார்.

கதை எளிமையானதாக இருந்தாலும் அறிவியல் பூச்சு, தேர்ந்த நடிகர்கள்,தெளிந்த தொழில்நுட்பக்குழு ஆகியனவற்றின் துணை கொண்டு நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக்ரவிச்சந்திரன்.

– செல்வன்

Related Posts