சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வருகிறது நான் அவசரப்படவில்லை – தங்கதுரை பேட்டி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை சொல்லிப் புகழ்பெற்றவர் தங்கதுரை.பொதுவாக எதிர்மறை எண்ணம் தரும் பழைய ஜோக் என்பதையே தமக்கான நேர்மறை எண்ணமாக்கி பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறார். அண்மையில் வெளியான சூர்யாவின் எதற்கும்துணிந்தவன் படத்தில் சிறிய வேடமென்றாலும் பெரிய கவனம் பெற்றார். 

அவரிடம் ஒரு பேட்டி…. 

1.எதற்கும் துணிந்தவன் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புப் பற்றி…?

படத்தில் எனக்கு நிறைய காட்சிகள் இருந்தன. ஆனால் நீளம் கருதி பலவற்றைக் குறைத்துவிட்டார்கள். ஆனாலும், உங்க சிஷ்யனா இருக்கறது பெருமை குருவே என்கிற வசனம் பெருமளவில் ரீச்சாகியிருக்கிறது. படப்பிடிப்புக்குப் போகுமிடங்களில் சூர்யா படத்தில் பார்த்தோம் நன்றாக நடித்திருந்தீர்கள் என்று சொல்கிறார்கள்.

Thangadurai - Suriya

Thangadurai – Suriya

2.செல்ஃபி படத்தில் நடித்தது குறித்து..?

செல்ஃபி படத்தில் இதுவரை பேசப்படாத புதியவிசயம் பேசப்பட்டிருக்கிறது. கல்லூரி சம்பந்தப்பட்ட அந்தக்கதையில் நான் புரொபசராக நடித்திருக்கிறேன். ஏப்ரல் 1 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது.

3. கல்லூரிமாணவராக நடித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது பேராசியராகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறதா?

பேராசிரியர் என்றால் வயதானவர் என நினைத்துவிடாதீர்கள். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பயிற்றுநராகச் சேர்வார்களே? அதுபோன்றுதான். படத்தின் கதைக்களமும் அதில் என் வேடமும் பெரிதாகப் பேசப்படும். நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும் என்னால் சிறப்பாகச் செய்யமுடியும் என்பதை நிரூபிக்கும் படமாக இது இருக்கும்.

4.இப்போது நடிக்கும் படங்கள்…? 

ராகவாலாரன்ஸ் சாருடன் ருத்ரன். பிரபுதேவா சார் நடிக்கும் பொய்க்கால்குதிரை, ஜல்சா ஆகிய படங்கள், முத்துக்குமார் இயக்கத்தில் சலூன்,வடிவேலு சாருடன் நாய் சேகர், சந்தானம் அண்ணன் நடிக்கும் புதியபடம், அர்ஜூன் சாருடன் தீயவர் குலைநடுங்க, பன்னிக்குட்டி,ஹரீஷ்கல்யாண் நடிக்கும் புதியபடம், வெற்றி நாயகனாக நடிக்கும் பம்பர், ஓவியா, யோகிபாபு நடிக்கும் படம், சன்னிலியோன் படம்,ஆதி, ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் பார்ட்னர் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.பார்ட்னர் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறேன்.

5.இவற்றில் உங்கள் வேடங்கள் எப்படி இருக்கும்.?

பிரபுதேவா சார் படங்கள், ஹ்ரீஷ்கல்யாண் படம், பம்பர் உட்பட பல படங்களில் ஹீரோவுடனே வருகிற மாதிரியான பெரியவேடங்கள் அமைந்திருக்கின்றன. பன்னிக்குட்டி படத்தில் நான்கு முக்கியவேடங்கள் அவற்றில் ஒருவனாக நடித்திருக்கிறேன். இப்படி நல்ல நல்ல வேடங்கள் அமைந்திருக்கின்றன.இவ்வாண்டு எனக்கு சிறந்த ஆண்டாக இருக்கும்.

6.இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காணமுடியவில்லையே?

இப்போது படங்களில் நடிக்கத் தேதி கொடுப்பதே சிரமமான காரியமாக இருக்கிறது.இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன். 

7.திரைப்படங்களில் நீங்கள் நடிக்கும் காட்சிகளுக்கு நீங்களே வசனங்கள் எழுதுவீர்களா? அல்லது சொன்னதை மட்டும் பேசுவீர்களா?

சில படங்களில் இதுதான் காட்சி, நீங்கள் கவுண்ட்டர் டயலாக் போட்டுக்கொள்ளுங்கள் என்பார்கள். சில படங்களில் இந்த இடத்தில் இதுவேண்டாம் ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் பேசுங்கள் என்பார்கள். அர்ஜூன் சார் படத்தில் அவர் காவல்துறை அதிகாரி நான் அவருடன் பணியாற்றும் காவலர். ஓரிடத்தில் இந்த இடத்தில் தங்கதுரையின் காமெடி இருந்தால் நன்றாக இருக்கும் பேசுங்கள் என்றார். பிரபுதேவா சார் சில் இடங்களில் உங்கள் பாடிலேங்வேஜோடு சொந்த வசனங்களைப் பேசுங்கள் என என்கரேஜ் செய்வார்.

8.நீங்கள் எழுதுவது, இயக்குநர் எழுதியதைப் பேசுவது, இரண்டில் எது எளிது.?

இதுதான் வசனம் பேசுங்கள் என்றாலும் இதுதான் காட்சி உங்கள் சொந்த வசனத்தைப் பேசுங்கள் என்றாலும் எனக்குச் சந்தோசம்தான்.  

Thangadurai

Thangadurai

9.சின்ன வேடங்களையடுத்து இப்போது நாயகனின் நண்பராகப் படம் முழுக்க வரும் வேடங்கள் வருகின்றன. அடுத்து கதாநாயகனா?

கதாநாயகனாக நடிக்கச் சொல்லிக் கேட்டும் சிலர் வந்தார்கள். நகைச்சுவை நாயகனாக பெரிய இடத்தைப் பிடிக்கவேண்டும் என்பதுதான் என் இப்போதைய ஆசை.அதனால் கதாநாயகனாக நடிக்க அவசரப்படவில்லை.

10.ஊட்டி காட்டுத்தீ குறித்துக் காணொலி வெளியிட்டீர்களே. எப்படி அந்தச் சிந்தனை வந்தது?
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் வெப்சீரிஸின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது.அதில் நான் ஒரு முக்கியவேடத்தில் நடிக்கிரேன்.  அதன் படப்பிடிப்பு முடித்து சலூன் படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை வந்து கொண்டிருந்தேன். அப்போது பற்றியெரியும் காட்டுத்தீயைப் பார்த்துப் பயமாக இருந்தது. மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அந்த வீடியோவை வெளியிட்டேன். அதற்கு மிகப்பெரிய வரவேற்பு. நிறையப் பகிர்ந்தார்கள். செய்தித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி கவனத்தைப் பெற்றது.

– சுரா

Related Posts