பாலகுமாரன் மகன் சூர்யா இயக்கத்தில் ஜெயம்ரவி
விஜய் நடித்த’பிகில்’ படத்தை இயக்கிய பிறகு தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார் இயக்குநர் அட்லி. அந்தப் படத்தில் ஷாரூக்கான் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே அட்லி தயாரிப்பில் ஒரு புதிய படம் உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அந்தப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இயக்குநர் அட்லியிடம் உதவியாளராகப் பணியாற்றுபவர்களில் எழுத்தாளர் பாலகுமாரன் மகன் சூர்யாவும் ஒருவர்.
அவர் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் புதியபடமொன்று சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்படத்தை இயக்குநர் அட்லி தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
நிவின்பாலி செய்த தாமதத்தால் அந்தப்படம் நடக்கவில்லை.
அந்தக்கதையைக் கேட்ட ஜெயம்ரவிக்குப் பிடித்திருக்கிறதாம். அது ஒரு அழகான காதல்கதை என்று சொல்லப்படுகிறது.
தொடர்ந்து சண்டைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம்ரவி, நடுவில் இப்படி ஒரு காதல் கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அதில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.











