களத்தில் மதுரை டைகர் – சிம்பு இரசிகர்கள் கொண்டாட்டம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ந்டிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.இன்று அந்தப் படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்டார்.
கோயில்பட்டியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
அரசன் படம் வடசென்னையை மையப்படுத்திய கதைக்களம் கொண்டது என்று வெற்றிமாறனே சொல்லியிருந்தார்.அதனால் வடசென்னை பகுதியைப் பிரதியெடுத்து பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படுகிறது.அங்குதான் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று முதலில் சொன்னார்கள்.
அதன்பின், தொடக்கத்தில் நிஜ வடசென்னைப் பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தப்படும் என்று சொல்லப்பட்டது.
இரண்டுமில்லாமல் இப்போது கோயில்பட்டியில் படப்பிடிப்பைத் தொடங்கியது ஏன்?
வடசென்னைப் பகுதியில் பெரியஆளாக வலம்வருகிற அரசன்,மதுரைப் பகுதியிலிருந்து சென்னைக்கு வந்தவர் என்பது போல ஒரு முன்கதை வைத்திருக்கிறாராம் வெற்றிமாறன்.
அதனால்,அங்கிருந்தே படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாம் என்று திட்டமிட்டு அதன்படி தொடங்கியிருக்கிறார்கள்.
மதுரைப் பகுதியில் விளையாட்டு வீரராக இருக்கும் அரசன், ஒரு பெரிய நிகழ்வின் காரணமாக சென்னைக்கு வருகிறார் என்று திரைக்கதை இருக்கிறதாம்.
இதற்காக,நேற்றே மதுரை சென்ற சிம்பு, இன்று தொடங்கிய படப்பிடிப்புத் தளத்துக்கு காலை எட்டுமணிக்கே சென்றுவிட்டாராம்.படப்பிடிப்புக்கு சிம்பு வருகிறார் என்கிற தகவல் தெரிந்ததும் பெருங்கூட்டம் கூடிவிட்டதாம்.கேரவனிலிருந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் செல்வதற்குக் கூட சிரமமாகிவிட்டது என்கிற அளவு கூட்டமாம்.
விளையாட்டு மைதானம் ஒன்றில் விளையாடுவது போல் படப்பிடிப்பு என்பதால் விளையாட்டு வீரர்கள் அணியும் உடை அணிந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் சிம்பு.
அந்த உடையின் முதுகில் மதுரை டைகர் என்று பெயர் பொறித்திருக்கிறது.
அதனால், புலிப்பாய்ச்சல் தொடங்கிவிட்டது என்று சிம்பு இரசிகர்கள் மகிழ்ச்சியாக அதைப் பகிர்ந்து வருகிறார்கள்.
முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினாறு நாட்கள் நடத்துவது என்று திட்டமிட்டு அங்கு சென்றிருக்கிறார்கள்.படப்பிடிப்பு வேகத்தைப் பொறுத்து ஒரு சில நாட்கள் கூடவோ குறையவோ ஆகலாம் என்று சொல்கிறார்கள்.
பெரிய கூட்டத்துக்கு நடுவே படப்பிடிப்பு நடைபெறுவதால் அவை வெளியாகிவிடக் கூடாது என்பதற்காக படப்பிடிப்புத் தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அவற்றைத் தாண்டி காணொலித் துண்டுகளும் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது என்கிறார்கள்.
இதனால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து படப்பிடிப்பைத் தொடர்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.











