January 22, 2026
சினிமா செய்திகள்

பூசை போட்டவுடன் பெரிய வியாபாரம் – சூர்யா 47 பட வியப்புகள்

நடிகர் சூர்யா மற்றும் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு டிசம்பர் 7 அன்று சென்னையில் பூசையுடன் தொடங்கியது.

இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய வெற்றிகள் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இளம் நடிகர் நஸ்லென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், ஆனந்த் ராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு இசை சுஷின் ஷியாம், ஒளிப்பதிவு வினீத் உண்ணி பாலோட்,படத்தொகுப்பு அஜ்மல் சாபு,கலை இயக்கம் அஸ்வினி காலே, சண்டைப்பயிற்சி சேத்தன் டி சௌசா

இப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் எனும் புதுநிறுவனம் மூலம் ஜோதிகா தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தொடங்கியதுமே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்திருக்கிறது.

என்ன ஆச்சரியம்?

அண்மைக்காலத்தில் டிஜிட்டல் ரைட்ஸ் எனப்படும் இணைய ஒளிபரப்பு உரிமை விற்பனை மொத்தமாகச் சரிந்து போனதால் ஒட்டுமொத்த தமிழ்த் திரைப்படத்துறையே தடுமாறி நிற்கிறது என்பது ஊரறிந்த இரகசியம்.

இந்நிலையில் சூர்யா 47 படம் பூசை போட்டவுடன் இணைய ஒளிபரப்பு, எஃப் எம் எஸ் எனப்படும் வெளிநாட்டு விநியோக உரிமை, பாடல் உரிமை ஆகியன விற்பனை ஆகிவிட்டன என்பதுதான் அந்த ஆச்சரியம்.

இதைவிடக் கூடுதல் வியப்பு தரும் செய்தியும் இருக்கிறது.

அது என்னவெனில்?

இந்தப்படத்தின் மொத்தச் செலவுத் தொகை சுமார் இருபத்தியிரண்டு கோடி என்று திட்டமிடப்பட்டிருக்கிறது.சூர்யா சம்பளம் இல்லாமல் இந்தக் கணக்கு.

இந்நிலையில் இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறதாம்.அதன் விலை சுமார் இருபத்து மூன்று கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.அதோடு, இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வசூலைப் பெற்றால் அதனடிப்படையில் இன்னும் கூடுதலான தொகை தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம்.

இந்தத் தொகையில் சுமார் பத்து கோடியை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் முன் தொகையாகக் கொடுத்திருப்பதாகவும் அதை வைத்துத்தான் படப்பிடிப்பே நடக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்தக் கணக்குப்படி பார்த்தால் ஒரு ரூபாய் கூட சொந்தப்பணம் போடாமல் ஒரு படத்தைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா.

பாடல் உரிமை மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை ஆகியன விலை குறித்து உலவும் தகவல் மற்றும் எல்லா மொழிகளிலும் திரையரங்க வெளியீட்டு உரிமை ஆகியனவற்றின் உத்தேசக் கணக்குப் போட்டால் கூட சுமார் எழுபத்தைந்திலிருந்து எண்பது கோடி வரை வருகிறது.

சூர்யாவின் புத்திசாலித்தனமான நகர்வால் இவ்வளவும் சாத்தியமாகியிருக்கிறதாம்.

இந்தத் தகவல்களை அறிந்து கிறுகிறுத்துப் போயிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

Related Posts