மீண்டும் வரும் அப்பாஸ் – சற்குணம் இயக்கத்தில் நடிக்கிறார்

1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ். அந்தப் படத்தின் வெற்றியால் அவருக்குத் தொடர் வாய்ப்புகள் வந்தன. அவருக்குப் பெண் இரசிகர்கள் அதிகரித்தனர்.
‘விஐபி’, ‘மின்னலே’, ‘பூச்சூடவா’, ‘பூவேலி’, ‘படையப்பா’, ‘சுயம்வரம்’, ‘மலபார் போலீஸ்’, ‘திருட்டுப்பயலே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட சில மொழிப் படங்களிலும் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் இவருக்குப் போதிய வாய்ப்புகள் வரவில்லை. இறுதியாக தமிழில் உருவான ‘ராமானுஜன்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சில விளம்பரங்களில் நடித்திருந்தார்.
அதன்பின் அவர்,தனது மனைவி குழந்தைகளுடன் நியூசிலாந்தில் குடியேறிவிட்டார். அவருடைய மனைவி அங்கு முன்னணி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். அப்பாஸும் முன்னணி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார் என்றும் மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா இருவரும் அங்கு படித்து வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ்.
இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோரது தயாரிப்பில் ஒரு இணையத் தொடர் உருவாகவிருக்கிறது.அத்தொடரை களவாணி,நையாண்டி,களவானி 2 உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் இயக்குகிறார்.
இவருடைய இயக்கத்தில் அதர்வா,ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்த பட்டத்துஅரசன் படம் 2022 நவம்பர் மாதம் வெளியானது.
அப்படத்தைத் தொடர்ந்து இந்த இணையத் தொடரை அவர் இயக்குகிறார்.
இந்தத் தொடரில்தான் நடிகர் அப்பாஸ் நடிக்கிறார்.நடிகைகள் துஷாரா விஜயன்,அதிதிபாலன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள்.
இத்தொடருக்கு எக்ஸாம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
அமேசான் இணையத்தில் வெளியிடுவதற்காக இத் தொடர் தயாரிக்கப்படுகிறதென்றும் இத்தொடரின் தொடக்கவிழா நாளை நடைபெறவுள்ளது என்றும் சொல்கிறார்கள்.தொடக்கவிழாவைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.கேரள மாநிலம் வண்டிப்பெரியாறுவில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இயக்குநர் சற்குணம் நடிகர் அப்பாஸ் ஆகியோருக்கான காரணப்பெயராக இந்தத் தொடரின் பெயர் அமைந்துள்ளது.இந்தத் தேர்வில் வெற்றி பெற்று இருவரும் மீண்டும் உற்சாகமாக வலம்வருவார்கள் என்பது அந்தத் தொடரில் பணியாற்றுவோர் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.
நம்பிக்கை பலிக்கட்டும். நல்லது நடக்கட்டும்.