டேனியல் பாலாஜியின் கடைசிப்படம் – விஜய்சேதுபதி வெளியிட்டார்

‘தி சவுண்ட் ஸ்டோரி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்படத்தில் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜெ.செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டைக் காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார்.
படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் தாமரை மற்றும் மோகன் ராஜன் எழுத, பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீ ராம் பாடியிருக்கிறார். இதனுடன் படத்தின் தயாரிப்பாளரான கல்பனா ராகவேந்தர் ‘புரோக்கன் ஆரோ..’ எனும் ஆங்கில பாடலுக்கு முதல் முறையாக இசையமைத்து, பாடல் எழுதி பாடியிருக்கிறார்.
கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார். பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. இதில் அவர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடித்திருந்ததைப் போல், அழுத்தமான வேடத்தில் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக இந்தத் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் டீசர் ,ட்ரெய்லர் ஆகியவை வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பெயர் வைக்காமல் பணியாற்றி வந்தனர்.இப்போது படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான சலனப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
இதனால் வெளியிடப்பட்டவுடனே வெகுமக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது இப்படம்.