கல்தா என்று பெயர் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

படித்தவுடன் கிழித்துவிடவும், தெருநாய்கள் ஆகிய படங்களை இயக்கிய ஹரிஉத்ரா இப்போது இயக்கியிருக்கும் படம் கல்தா. சிவநிஷாந்த்,ஆண்டனி சகாயராஜ்,ஐரா,திவ்யா,அப்புக்குட்டி,ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன
மருத்துவக்கழிவுகள் எப்படி மக்களைப் பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 12 அன்று நடைபெற்றது.விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் பாக்யராஜ், நடிகர் ராதாரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் ஹரி உத்ரா பேசியதாவது….
“கல்தா” எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவக் கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்தப்படம் செய்துள்ளோம்.இக்கதை பல தயாரிப்பாளர்களிடம் சென்றது. எல்லோரும் கிண்டல் செய்தார்கள் ஆனால் தயாரிப்பாளர் ரகுபதி என்னை நம்பித் தயாரித்துள்ளார்.
“மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். ஐரா, திவ்யா ஆகியோர் நாயகிகளாக நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார்.
கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்கிறார்கள். அதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம்.
அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமாக இதை உருவாக்கியிருக்கோம். இந்தப்படத்தை எடுத்த இடங்களில் மக்களின் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. நிஜத்தில் இங்க நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களை மையமாக வைத்துத்தான் இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். இம்மாதம் படம் வெளியாகிறது. இப்படம் உருவாக ஆதரவாக இருந்த படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள்.
இவ்வாறு அவர் பேசினார்.