காலா படத்துக்கு கர்நாடகாவில் தடை – ரஜினி என்ன செய்யப் போகிறார்
இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் இது ரிலீஸாக உள்ள நிலையில் கர்நாடகாவில் மட்டும் படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில நலன் கருதி ‘காலா’ படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் அறிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் ரஜினி சொன்ன கருத்து கர்நாடக மக்களுக்கு எதிராக இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ரஜினியின் கருத்துகளுக்காகவே தடை என்பதால் இதற்கு ரஜினி என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.











