திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய் – புதியபடம் நாளை தொடக்கம்
கோவையை தலைமையிடமாகக் கொண்டு 12 நாடுகளில் 600 க்கும் மேற்பட்ட வல்லுநர்களுடன் எக்ஸ்டெரோ (EXTERRO} என்கிற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருபவர் பாபி பாலச்சந்திரன். திருநெல்வேலியின் அருகில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்த இவரது நிறுவனத்தின் மென்பொருட்கள் பல நாடுகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வெளிநாடுகளில் அரசு, உளவு, இராணுவம் போன்ற துறைகளில் இந்நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி எண்ணற்ற குற்றங்களைத் தடுத்தும், குறைத்தும் பாதுகாத்து வருகிறார்கள்.
பாபி பாலச்சந்திரன் மென்பொருள் துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துள்ளார். அந்த வகையில் தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார்.
முதல்படமாக அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டிமாண்டிகாலனி 2 படத்தை வாங்கி வெளியிடுகிறார்கள்.
இந்நிறுவனம் நேரடியாகத் தயாரிக்கும் முதல்படத்தை விக்ரம் ராஜேஸ்வர் – அருண் கேசவ் என்கிற இரட்டை இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.
இப்படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார்.அதுல்யா ரவி நாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை சுரேஷ் ஏ.பிரசாத் கவனிக்க கலையை அருண் சங்கர் துரையும் சண்டைப் பயிற்சியை டான் அசோக்கும் மேற்கொள்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில்,இப்போது புதியபடமொன்றைத் தயாரிக்கிறார்கள்.
அப்படத்தை மான்கராத்தே பட இயக்குநர் திருக்குமரன் இயக்குகிறார்.அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.வெந்துதணிந்ததுகாடு பட நாயகி சித் இனானி,தான்யா இரவிச்சந்திரன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்துக்கு டிஜோஜோமி ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தொடக்கவிழா நாளை நடைபெறவிருக்கிறது.
இதன் படப்பிடிப்பு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தொடங்கவிருக்கிறதாம்.முதல்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.
நாளை தொடக்கவிழா,படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? என்றால், அருண்விஜய் இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார்.இன்னும் சில நாட்கள் அப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.அதை முடிக்கிற நேரத்தில் தேர்தல் வருகிறது. எனவே,ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல்.அது முடிந்தவுடன் ஏப்ரல் 22 ஆம் தேதிவாக்கில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்களாம்.











