ரஜினி 171 படத்தில் ரன்பிர்சிங் ஸ்ருதிஹாசன் – புதிய தகவல்

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.இது ரஜினியின் 170 ஆவது படம்.
இதற்கடுத்து ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினி 171 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர்.இந்தப்படத்துக்கும் அனிருத் இசையமைப்பதாகச் சொல்லப்படுகிறது.
லோகேஷ்கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினி மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன.
இப்போது அது இல்லையென்றாகிவிட்டதாம்.அப்படியென்றால் அவருக்குப் பதிலாக நடிக்கப் போவது யார்? என்றால்,
அந்தப்படத்தில் ரஜினி தவிர நான்கு முக்கிய வேடங்கள் இருக்கின்றனவாம்.
அந்த வேடங்களில் யார் யாரை நடிக்க வைப்பதென லோகேஷ்கனகராஜ் முடிவு செய்து அதற்கு ரஜினியிடம் சம்மதம் வாங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரையாக ஒப்பந்தம் செய்யும் பணிகள் தற்போது நடந்துவருகின்றன என்கிறார்கள்.
அவர்கள் யார்?
சத்யராஜ், இராகவா லாரன்ஸ், இந்திநடிகர் ரன்பிர்சிங் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர்தாம் அந்த நான்குபேராம்.
இவர்கள் ஒவ்வொருவரிடமும் கதை சொல்லி சம்மதம் வாங்கி அதன்பின் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
மிகப்பெரிய செலவில் உருவாக்கப்படவிருக்கும் இப்படத்துக்கு அதற்கேற்ப வியாபாரமும் இருக்கவேண்டும் என்பதால், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் படத்தைப் பெரிதாக்க வேண்டும் என்கிற முனைப்பில் படக்குழுவினர் செயல்படுகிறார்களாம்.
அதனால், முதலில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் எனக்கேட்டு ஷாருக்கானை அணுகினார்களாம்.அவர் சில காரணங்களால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
அதனால் தற்போது இந்தியில் புகழ்பெற்றிருக்கும் ரன்பிர்சிங்கைக் கேட்டிருக்கிறார்கள். அவரும் சம்மதம் சொல்லிவிட்டாராம்.
அதற்கடுத்து சத்யராஜ், இராகவா லாரன்ஸ் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அண்மையில் வெளியான ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்கிற பாடலில் லோகேஷ்கனகராஜ் நடித்திருந்தார்.
எனவே, லோகேஷ்கனகராஜ் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதும் உறுதியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.அப்படி நடந்தால் ரஜினி படத்தில் கமல் மகள் நடிக்கிறார் என்றாகிவிடும். இரு பெரும் நடிகர்களின் இரசிகர்களும் இந்தப்படத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறார்கள்.