விமர்சனம்

வல்லவன் வகுத்ததடா – திரைப்பட விமர்சனம்

ஐந்து கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு பணத்தைப் பொதுவான இழையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதையில்
தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்கிற நீதியைச் சொல்லியிருக்கும் படம் வல்லவன் வகுத்ததடா.

தேஜ் சரண்ராஜ், ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தேஜ்சரண்ராஜ்,ரெஜின்ரோஸ் ஆகியோர் திருடர்கள், விக்ரம் ஆதித்யா, உடலுறுப்புகளை அடமானமாக வைத்துப் பணம் கொடுப்பவர்,வாடகை மகிழுந்து ஒட்டுநராக ஸ்வாதி மீனாட்சி,காவல்துறை ஆய்வாளராக ராஜேஷ் பாலச்சந்திரன், உடலழைகையும் அதோடு கொஞ்சம் காதலையும் கலந்து ஏமாற்றிப் பிழைக்கும் அனன்யா மணி ஆகியோர்தாம் கதைமாந்தர்கள்.

இவர்கள் அனைவருமே கொடுத்த வேடங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜேஷ்பாலச்சந்திரன் எல்லோரையும் முந்தி நிற்கிறார்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, காட்சிகளுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைக் கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

சகிஷ்னா சேவியர் பின்னணி இசை உறுத்தாமல் படம் பார்க்க வைத்திருக்கிறார்.

அஜய்யின் படத்தொகுப்பு படம் இலகுவாக நகர உதவியாக அமைந்திருக்கிறது.

விதவிதமான கதாபாத்திரங்கள் அவர்களுடைய மாறுபட்ட தேவைகள் மற்றும் குணாதிசயங்கள் ஆகியனவற்றை வைத்து சுவையான திரைக்கதை அமைத்திருக்கிறார்.சில இடங்களில் குறைவாக இருக்கிறது,சில இடங்களில் யூகிக்க வைக்கிறது,பல இடங்களில் இரசித்துப் பார்க்க வைத்திருக்கிறது.

இவற்றைத் தாண்டி, நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் என்கிற நல்ல கருத்தைச் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் விநாயக்துரை.

அதை விரல்நீட்டிச் சொல்லாமல் பார்க்கும்போதே உணர வைக்கிறார்.குறிப்பாக சுவாதிமீனாட்சிக்குக் கஷ்டம் தொடரக்கூடாது நன்மை நடக்கவேண்டும் என்று பார்ப்போரை வேண்ட வைத்திருப்பது உள்ளிட்ட சில இடங்கள் அவருடைய நோக்கத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.

– இளையவன்

Related Posts