September 7, 2024
விமர்சனம்

ஃபர்ஹானா – திரைப்பட விமர்சனம்

வறுமை நிலை என்கிற புறமும் அன்பைத் தேடும் அகமும் மதம் தாண்டிய மனிதம் சார்ந்தது என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஃபர்ஹானா

பெண்களின் மடியில் பெருமைகளைச் சுமத்தியிருக்கும் மதங்கள், அவர்கள் வீட்டைத் தாண்டி வெளியே செல்லக்கூடாது என்று சொல்லியே வளர்க்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து அந்தக் குடும்பத்தைக் காக்க வேலைக்குப் போகும் பெண் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்திக் கலங்க வைக்கிறது ஃபர்ஹானா.

எந்த வேடமானாலும் என்னிடம் கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சவால் எல்லாம் விடாமல் எல்லாவற்றையும் தாங்கும் சக்தி படைத்தவராக இருக்கிறார் ஜஸ்வர்யாராஜேஷ்.

மதம் விதிக்கும் கட்டுப்பாடு, குடும்ப நிலை, மகளின் மருத்துவம் ஆகியனவற்றுக்குள் சிக்கி அவற்றிலிருந்து மீள வேலைக்குப் போனால் அங்கு முளைக்கும் புதியசிக்கல் ஆகியனவற்றை அநாயசமாக எதிர்கொண்டு பாராட்டுப் பெறுகிறார் ஐஸ்வர்யாராஜேஷ்.

ஜித்தன்ரமேஷுக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்று உணரவைக்கும் வேடம். அதைப் பொறுப்பாகச் செய்திருக்கிறார்.

கிட்டியின் வேடமும் கோபமும் பழையன கழிதலுக்கும் புதியன புகுதலுக்குமான போராட்டம்.

ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் ஆகியோர் திரைக்கதைக்குப் பலம் சேர்க்கின்றனர்.

செல்வராகவனின் குரல் அவரைவிட நன்றாக இருக்கிறது.

கோகுல்பினாயின் ஒளிப்பதிவு, இஸ்லாமியக் குடியிருப்புகள் மற்றும் இஸ்லாமியக்குடும்பங்கள் பற்றிய காட்சித் தொகுப்பு.

ஜஸ்டின்பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணியும் பலம்.

பழமையைப் போற்றும் குடும்பத்திலிருந்து நவீன தொழில்நுட்ப வேலைக்கு வரும் பெண், மனித பலவீனங்களைப் பணமாக்கத்துடிக்கும் தொழில்நுட்பங்கள், அவற்றுக்குள்ளும் ஒளிந்திருக்கும் அக்கறைக்குரல், எல்லாவற்றையும் தாண்டிய கட்டுக்கோப்பு ஆகிய பல ஆழமான கருத்துகளை அடுக்கிய திரைக்கதையை அழகாகக் கையாண்டு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன்வெங்கடேசன்.

– குமார்

Related Posts