விமர்சனம்

டகால்டி – திரைப்பட விமர்சனம்

மும்பையில் சின்னச் சின்ன தப்புகளைச் செய்துகொண்டிருக்கும் சந்தானம், பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணைக் கடத்தும் வேலையை ஒப்புக்கொள்கிறார்.

சொன்னபடி கடத்தினாரா? கடத்தும்போது என்னவெல்லாம் நடந்தது என்பதைச் சிரிப்புடன் சொல்வதுதான் டகால்டி.

சந்தானம் படத்துக்குப்படம் மெருகேறுகிறார். மிக எளிதாக வேடத்துக்கேற்ற நடிப்பைக் கொடுக்கிறார். நகைச்சுவை, நடிப்பு ஆகியனவற்றைத் தாண்டி சண்டைக்காட்சிகளிலும் தேர்ந்திருக்கிறார்.

நாயகி ரித்திகாசென் தமிழுக்கு புதுவரவு. அப்பாவியாக நடித்து அனைவரையும் ஈர்க்கிறார். அவர் கதை சொல்லும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

யோகிபாபு வருகிற காட்சிகளில் சிரிப்பு நிச்சயம். சந்தானமும் அவரும் வருகிற காட்சிகளில் கேட்கவே வேண்டியதில்லை. நன்றாகச் சிரிக்கலாம்.

வில்லன் வேடத்தில தருண் அரோரா. அவருடைய வினோத குணம்தான் கதையே. அந்தக் குணத்துக்கேற்ப நடித்திருக்கிறார் அவர்.

ராதாரவி, ஸ்டன்ட்சில்வா ஆகியோரின் பங்கு திரைக்கதையை நகர்த்த உதவுகிறது.

தீபக்குமார்பாரதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென இருக்கின்றன. இரவுக்காட்சிகளில் ஒளியமைப்பு நன்று.

விஜய் நாராயணின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அளவு.

இயக்குநர் விஜய்ஆனந்த், ஒரு மெல்லிய கதையை எடுத்துக் கொண்டு அதை முழுநீளப் படமாக்கியிருக்கிறார்.

யாரை எவ்வளவு பயன்படுத்த வேண்டுமென்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. திரைக்கதை மேலோட்டமாக இருப்பது பலவீனம்.

ஆனாலும்,சந்தானத்தை நம்பிப் பார்க்கலாம்.

Related Posts