விமர்சனம்

ஜுங்கா – திரைப்பட விமர்சனம்

தாத்தா லிங்காவும் அப்பா ரங்காவும் பெயர் பெற்ற தாதாவாக இருந்தும் பரம்பரை சொத்தை இழந்துவிடுகிறார்கள். அதை ஜுங்கா எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள்.

டான் டாவடிக்கக் கூடாது என்கிறார் விஜய்சேதுபதி. அவர் சொல்லாமல் விட்டது டான் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது.

பொள்ளாச்சியிலிருந்து சென்னை வந்து 2457 கோடிக்குச் சொந்தக்காரரான செட்டியாரை எதிர்கொள்வது, சென்னையிலிருந்து பிரான்ஸ் சென்று இத்தாலி போதைகடத்தல் கும்பல், பிரான்ஸ் காவல்துறை, மைனஸ் 5 டிகிரி உள்ள ஆற்றில் விமானத்தில் போனாலே முக்கால்மணி நேரம் ஆகுமிடத்துக்கு நீந்திச்செலவது ஆகியனவற்றை அநாயசமாகச் செய்கிறார் விஜய்சேதுபதி.

இது எப்படி நடக்கும்? என்று கேள்வி கேட்காவிட்டால் சிரிப்பு நிச்சயம்.

விஜய்சேதுபதி பல்வேறு தோற்றங்களில் வருகிறார். எல்லாவற்றிலுமே பாஸ் மார்க் வாங்குகிறார்.

அவருடைய கஞ்சத்தனம் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விசயம்தான். அவரும் யோகிபாபுவும் வருகிற காட்சிகள் எல்லாம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன.

நாயகி சாயிஷாவிடம் காதல் சொல்லும் காட்சியில் காதல் சொல்வதோடு பெரும் பணக்காரர்கள் பார்வையில் ஏழைகள் நிலை என்ன? என்பதையும் எடுத்துச் சொல்லி கலங்க வைக்கிறார் விஜ்யசேதுபதி.

நாயகி சாயிஷா அழகுப்பதுமையாக மட்டுமின்றி விஜயசேதுபதி மேல் காதல் கொள்ளும் காட்சியில் நன்றாக நடித்துமிருக்கிறார்.

யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரை மிஞ்சி நம்மைச் சிரிக்க வைக்கிறார் விஜயா பாட்டி. அவருடைய அதகளம் ஜுங்காவின் பெரும்பலம்.

ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்துபோகிறார் மடானோ. வந்தவரை சிறப்பும் சிரிப்பும்.

டட்லியின் ஒளிப்பதிவில், பொள்ளாச்சி அழகு மட்டுமின்றி பிரான்ஸ் நகரின் அழகும் அப்படியே நம் கண்களுக்குக் கடத்தப்படுகிறது.

சித்தார்த் விபின் இசை படத்துக்குப் பொருத்தம்.

நகைச்சுவை என்று முடிவெடுத்த பிறகு, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கோகுல்.

அவங்கிட்ட கதை இல்ல, செகண்ட் பார்ட்டுக்கு அடி போடுறான் என்று சுயவிமர்சனமும் செய்து கொள்கிறார்.

ஜுங்கா ரன்னிங் சக்ஸஸ்ஃபுல் என்று சொல்லி படத்தை
முடிப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

Related Posts