விமர்சனம்

லியோ – திரைப்பட விமர்சனம்

இமாச்சலபிரதேசத்தில் மனைவி த்ரிஷா மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்துடன் வசித்துவருகிறார் விஜய் அவர் பெயர் பார்த்திபன். அங்கு நடக்கும் ஒரு சண்டையில் அவர் செய்யும் செயலால் மிகவும் புகழ்பெறுகிறார். அதன்பின் அவரைத் தேடி போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்யும் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் வருகிறார்கள்.

அவர்கள் வந்து பார்த்திபனை நீ லியோதானே என்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படிக் கேட்கிறார்கள்? அவர்கள் விஜய்யைத் தேடி ஏன் வந்தார்கள்? அதன்பின் என்னவெல்லாம் நடந்தது? என்பதைச் சொல்வதுதான் படம்.

விஜய் படம் என்றால் இரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அவை அத்தனையும் படத்தில் இருக்கிறது. அதிரடியான சண்டைகள், அட்டகாசமான நடனம், அன்பான குடும்பத்தலைவன் ஆகிய எல்லாவற்றையும் சரியாகச் செய்து கைதட்டல் பெறுகிறார்.இரசிகர்களுக்கு அரசியல் ஆசையைத் தூண்டும் விதமான வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

விஜய்யின் மனைவியாக நடித்திருக்கும் த்ரிஷா அதற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார். அவர்களுக்குள்ளான அந்நியோன்யம் நிஜ தம்பதிகள் தோற்கும் வண்ணம் இருக்கிறது.

சஞ்சய்தத், அர்ஜூன் ஆகியோர் முதன்மை வில்லன்கள்.இருவருமே முதிர்ந்த அனுபவஸ்தர்கள் அதைத் தங்கள் நடிப்பிலும் குறைவின்றிக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் வரும் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் படத்தைப் பரபரப்பாக்கப் பயன்பட்டிருக்கின்றன.

மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி,மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் ,மடானோ செபாஸ்டின், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் படத்தில் இருக்கிறார்கள். அவர்களால் அந்தந்தப் பாத்திரங்களுக்குப் பலம்.இரசிகர்களுக்கும் நிறைய பிரபலங்களைப் பார்த்த நிறைவு.

மனோஜ்பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் அழகான காட்சிகளும் அலறவைக்கும் காட்சிகளும் பதற வைக்கும் காட்சிகளும் நிறைந்திருக்கின்றன. கதையையும் அதன் தன்மையையும் உள்வாங்கி காட்சிகளாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் நிறைவாக அமைந்திருக்கிறது. பின்னணி இசைக்கு இன்னும் மெனக்கெட்டிருக்கவேண்டும்.

படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ், ஒரு இரசிகரைப் போலப் படத்தைப் பார்த்துவிட்டார்.தொழில்நுட்பக்கலைஞராகப் பார்த்திருந்தால் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கும் லோகேஷ்கனகராஜ், விஜய்யின் தற்காலத் தேவைகளுக்கேற்ப காட்சிகளையும் வசனங்களையும் வைத்திருக்கிறார். ஜார்ஜ்மரியான் மற்றும் கமல்ஹாசன் குரல் ஆகியனவற்றின் மூலம் எல்சியூ எனப்படும் அவருடைய திரைபிரபஞ்சத்தை நிறுவியிருக்கிறார்.

படத்தில் சிற்சில குறைகள் இருப்பினும் மூடநம்பிக்கை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராகக் கதாநாயகன் போரிடுகிறார் எனும் மையக்கதை வரவேற்கத் தகுந்ததாக அமைந்திருக்கிறது.

– ஆநிரையன்

Related Posts