சினிமா செய்திகள்

இரண்டு மடங்காக உயர்ந்த சம்பளம் – வியக்க வைக்கும் விக்ரம்

நடிகர் விக்ரம் இப்போது பா.இரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படத்தின் குறுமுன்னோட்டம் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தங்கலான் படத்துக்கு அடுத்து விக்ரம் நடிக்கும் புதியபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

ஆனால், அடுத்த படம் முடிவாகி அதற்கான விளம்பரப்படமும் தயாராகிவிட்டது.

விக்ரம் நடித்த இருமுகன் படத்தைத் தயாரித்த ஷிபுதமீன் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். அப்படத்தை அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற சித்தா படத்தின் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார்.

ஏற்கெனவே பலர் விக்ரமிடம் கதை சொல்லிவிட்டுக் காத்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் கதை சொன்னார் எஸ்.யு.அருண்குமார். அவர் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனதால் எல்லோருக்கும் முந்தி இவருடைய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கிவிட்டார் விக்ரம்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. பட அறிவிப்பையே ஒரு குறுமுன்னோட்டமாக வெளியிடத் திட்டமிட்டு அதற்கான படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த டீசர் மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கிறதாம்.ஆனால், தங்கலான் முன்னோட்டம் வெளிவரும் நேரத்தில் அதை வெளியிடவேண்டாம் என்று நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான செய்தி, இந்தப்படத்துக்காக விக்ரம் வாங்கும் சம்பளம் சுமார் நாற்பது கோடி என்பதுதான்.

தங்கலான் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் சுமார் 22 கோடி, அந்தப் படம் வெளிவருமுன்பே ஒப்பந்தமாகியிருக்கும் புதியபடத்துக்கு சுமார் பதினெட்டு கோடி அதிகம் என்பது அனைவரும் வியக்கக்கூடிய செய்தி.

இதற்குக் காரணம், விக்ரம் நடிக்கும் படங்களின் வியாபார எல்லை விரிவடைந்திருப்பதுதான் என்கிறார்கள்.நல்ல விசயம்தான்.

Related Posts