சென்னை வருகிறார் சின்ன தல – நவம்பரில் படப்பிடிப்பு
சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைகிறார் அவருடைய திரையுலக அறிமுகப் படத்தை அறிமுக இயக்குநர் லோகன் இயக்குகிறார்.
இவர், மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டதல திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் புதியவர் ஆனால் படத்தில் பணியாற்றும் மற்ற தொழிலிநுட்பக் கலைஞர்கள் புகழ்பெற்றவர்கள்.இந்தப்படத்துக்கு
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார், சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்.முத்துராஜ் கலை வடிவமைப்பைச் செய்கிறார்.
ஆஸ்கர் விருது பெற்று உலகப்புகழ் பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.சுப்ரீம் சுந்தர் சண்டைப்பயிற்சி இயக்குநராக இருக்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பல முக்கியப் படங்களில் தயாரிப்புப் பொறுப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட டி.சரவணகுமார், இத்திரைப்படத்தை புதிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் மூலம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கான அறிமுக நிகழ்வு ஜூலை 4 அன்று சென்னையின் ஒரு பெரிய நட்சத்திர விடுதியில், திரையுலகப் பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான நிகழ்வாக நடந்தது.
கிரிக்கெட் வீரர் கதாநாயகன் என்றால் அதன் கதைக்களம் கிரிக்கெட்டாகத்தானே இருக்கும்.அப்படித்தான் இருக்கிறதாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரத்தில் சென்னையில் தொடங்கவிருக்கிறதாம்.
இதற்காக ஒரு பெரிய செட் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். முத்துராஜ் தலைமையில் ஒரு பெரியகுழு அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாராம்.
இந்நிலையில், இந்தப் படத்தில் சுரேஷ் ரெய்னாவைத் தாண்டி தமிழிலிருந்து ஒரு பெரிய கதாநாயகனும் கன்னடத்திலிருந்து இன்னொரு பெரிய ஹீரோவும் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் அதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் விரைவில் அவை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம்,ஓர் அறிமுக இயக்குநர் கிரிக்கெட்டில் புகழ் பெற்றிருந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை அறிமுக நடிகர் இவர்கள் எல்லோரும் இணையும் படம் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கிறதாம்.
அவ்வளவு பணத்தை நம்பிச் செலவழிக்கக் காரணம், படத்தின் கதை தான்.அதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை.அந்த அடிப்படை வலுவாக இருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று படக்குழுவினர் தெம்பாகச் சொல்கிறார்கள்.











