விஜய்சேதுபதி மணிகண்டன் இணையும் இணையத் தொடரில் இருபெரும் மாற்றங்களா?

விஜய்சேதுபதி நடிக்கும் இணையத் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இந்தத் தொடரை,‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் எழுதி இயக்குகிறார் என்றும்,இந்தப் இணையத்தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக 7 சிஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பி.ஆறுமுககுமார் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
.
இந்த இணையத்தொடருக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
பி.அஜித் குமார் படத்தொகுப்பாளராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.இதன் ஒலி வடிவமைப்பை அஜயன் கே.அடாத் மேற்கொள்கிறார்.இத்தொடரின் உடை வடிவமைப்பை கவிதா கையாள்கிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூசையுடன் இத்தொடரின் படப்பிடிப்பு தொடங்கியது.
தொடக்கத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென தடைபட்டது. விஜய்சேதுபதி மற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது என்று சொன்னார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு தற்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் நடந்து வருகிறது.
இந்த இடைவெளியில் இருபெரும் மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்று சொல்கிறார்கள்.
ஒன்று, இந்த இணையத் தொடரின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றிருந்த பி.ஆறுமுககுமார் அதிலிருந்து விலகிக் கொண்டார் என்பது. அதைவிட வியப்பான இன்னொன்று இத்தொடரை இயக்கும் பொறுப்பிலிருந்து இயக்குநர் எம்.மணிகண்டன் விலகிக் கொண்டார் அல்லது விலக்கப்பட்டுவிட்டார் என்பது.
இப்போது இந்தத் தொடரை இதன் படத்தொகுப்பாளராக ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருந்த பி.அஜித்குமார் இயக்குகிறார் என்றும் சொல்லப்பட்டது.
படத்தொகுப்பாளராக மட்டுமின்றி இரண்டு மலையாளப் படங்களை இயக்கிய அனுபவமும் கொண்டவர் என்பதால் அவரை இயக்குநராக்கியிருக்கிறார்கள் என்றார்கள்.
இதுகுறித்து இத்தொடர் சம்பந்தமானவர்களிடம் விசாரித்தால், இத்தொடரின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து ஆறுமுக குமார் விலகிக் கொண்டது உண்மை. இப்போது விஜய்சேதுபதியே தயாரிப்புப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதேசமயம் இயக்குநர் மணிகண்டன் இல்லை என்பது உண்மை இல்லை. அவர்தான் இப்போதும் இயக்குகிறார்.
அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவியலாத நாட்களில் அஜீத் இயக்குநர் பொறுப்பை ஏற்றிருந்தார்.அதுவும் ஒரு சில நாட்கள்தாம்.அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் மணிகண்டன் இணைந்துவிட்டார் என்கிறார்கள்.