சினிமா செய்திகள்

நள்ளிரவில் நடந்த நிகழ்வு – லியோ சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை நேற்றிரவு அமைச்சர் உதயநிதி பார்த்தார்.அவருடன் லியோ படக்குழுவினரும் படம் பார்த்துள்ளனர்.

படத்தைப் பார்த்துவிட்டு அதிகாலை 3 மணி அளவில் அப்படத்தைப் பற்றிய தன் கருத்தை சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது…

தளபதி விஜய் அண்ணாவின் லியோ சிறப்பு.லோகேஷ் கனகராஜின் இயக்கம் மிகச்சிறப்பு.அனிருத்தின் இசை அன்பறிவின் சண்டைப்பயிற்சி ஆகியன அருமை.லோகேஷ்கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இனிமை.படத்தைத் தயாரித்திருக்கும் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனால் லியோ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரைக்கு வருமுன்பே பார்க்கும் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே உதயநிதி பதிவிடுவார்.நன்றாக இல்லையென்றால் சத்தமின்றிக் கடந்து போய்விடுவார். இப்போது அவர் இவ்வளவு பாராட்டியிருப்பது படத்துக்குப் பெரும்பலம் என்று உற்சாகமாகச் சொல்கின்றனர்.

அதோடு அரசியல்ரீதியாகவும் உதயநிதியின் பதிவு பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே லியோ படத்தின் அதிகாலைக் காட்சிக்கு அரசு அனுமதி மறுத்தது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், கடம்பூர்ராஜு உள்ளிட்டோர் அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டுவந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி, லியோ படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பெரிதும் பாராட்டிப் பதிவிட்டதன் மூலம் அதிமுகவினரின் கருத்துகளைப் பொய்யாக்கிவிட்டார் என்று சொல்கிறார்கள்.

நாளை காலை ஏழுமணிக்குத் திரையிடலாமா? கூடாதா? என்பது குறித்த முடிவை தமிழ்நாடு அரசு இன்று மதியத்துக்குள் தெரிவிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அதற்கு முன்பாகவே உதயநிதியின் இந்தப் பதிவு வெளியாகியிருப்பது லியோ குறித்த அரசின் முடிவு பற்றிய முன்னோட்டம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts