2.ஓ – திரைப்பட விமர்சனம்
இந்த உலகத்தில் மனிதர்களைவிட பறவைகள் அதிகம் பறவைகளை விட பூச்சிகள் அதிகம்.
மனிதர்கள் செய்யும் தவறு காரணமாக பறவைகள் அழிகின்றன, இப்படியே போனால் பூச்சிகள் மனித இன அழிவுக்குக் காரணமாகிவிடும் என்கிற ஆழமான கருத்தைச் சொல்ல சுமார் அறுநூறு கோடி செலவில் வாணவேடிக்கை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
சென்னை மாநகரில் எல்லோருடைய கைபேசிகளும் பறந்து சென்றுவிடுகின்றன. அவை திருக்கழுக்குன்றம் வரை போய் அதன்பின் காணாமல் போகின்றன.
அவை எங்கு மாயமாகின்றன என்று கண்டுபிடிக்க அரசாங்கம் முழுமூச்சாய் முனைய அதைச் செய்தது யார்? எதற்காக? என்கிற விவரங்கள் வெளியாகி பார்க்கிற நம்மைப் பதறவைக்கின்றன.
அறிவியலாளர் வசீகரன், சிட்டி, சிட்டி 2.ஓ மற்றும் ஒரு குட்டி ஆகிய தோற்றங்களில் வருகிறார் ரஜினி.
இவற்றில் சிட்டி வெர்சன் 2.ஓ என்று அவர் அதிரடி காட்டும்போது அரங்கம் அதிர்கிறது.
நாயகி எமிக்கு ஓர் அழகான வேடம். அவருடைய மொத்த அழகையும் மூடி வைத்தாலும் ரஜினிக்கு இணையாக மிடுக்கு காட்டுவதும் லேப்டாப்புக்கு எதுக்கு நன்றி என்று அவரையே தடுமாறவைக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன்.
இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலியை நினைவுபடுத்துகிறார் பட்சிராஜா வேடத்தில் நடித்திருக்கும் அக்ஷய்குமார். அவருடைய இயல்பான இப்போதைய தோற்றம் எங்காவது இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆக்ரோஷமாக அலறுகிற காட்சிகளில் தொழில்நுட்பங்களைத் தாண்டி தன்னை வெளிப்படுத்துகிறார்.
இவர்களைத் தாண்டி படத்தில் இடம்பெறுகிற கதாபாத்திரங்கள் ஒருசில மட்டுமே .
ஐசரிகணேஷ் மயில்சாமி உட்பட அவர்கள் கொடுத்த வேலைக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள் .
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் புல்லினங்காள் பாடல் மயங்கவைக்கிறது. இந்திர லோகத்து சுந்தரியே தாளம் போட வைக்கிறது.
நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கிப்பிடிக்கிறது. அக்ஷய்குமார் கதையை கொஞ்சம் வேறுபடுத்திக் காட்டியிருக்கலாம்.
படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்.
ஆட்மபரம் போல் தொடங்கி இன்று (அதுவும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு) அத்தியாவசியமாகிவிட்ட கைபேசிகளால் சுற்றுச்சூழல் கெட்டுப்போவதைப் பற்றிப் பேசியிருப்பதோடு முப்பது கிராம் குருவியை வாழவிடாத கொடூர மனம் படைத்தவர்களாக நாம் மாறிப்போனதை நமக்குக் காட்டி தலைகுனிய வைக்கிறார் ஷங்கர்.
உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற புகழ்பெற்ற சுற்றுச்சூழல் மொழியை உலகம் வியக்கும் வண்ணம் காட்சியாக்கிக் கொடுத்த சுபாஷ்கரன் ஷங்கர் ஆகியோரால் உலகத்தமிழர்கள் பெருமை கொள்ளலாம்.











