செங்களம் – இணையத் தொடர் விமர்சனம்
இணையத்தொடர்களுக்குத் தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், ஆபாச அலம்பல்கள் என்று தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி செங்களம் இணையத்தொடரில், அரசியலில் நடக்கும் நம்பவியலாச் செயல்களைக் காட்சிப்படுத்தி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
விருதுநகர் நகராட்சியைக் கதைக்களமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தாலும் தொடரைப் பார்க்கும் அனைவருக்கும் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தலைவர்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கலைஞர் போல் தெரியும் சரத்லோகிததாஸ், ஜெயலலிதா போல் தோன்றும் வாணிபோஜன், சசிகலா மாதிரி காட்சிப்படுத்தப்பட்ட ஷாலிநிவேகாஸ் ஆகியோரை வைத்துக் கொண்டு சமகால அரசியல் விமர்சனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
சூர்யகலா என்கிற பெயரில் நடித்திருக்கும் வாணிபோஜன் நிஜமாகவே அரசியலுக்கு வரலாம். அரசியல்வாதியாக நடிக்கச் சொன்னால் அப்படியே மாறியிருக்கிறார்.
உடன்பிறவா தோழியாக நாச்சியார் என்ற பெயரில் வரும் ஷாலிநிவேகாஸ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி யார் இவர்? என்று எல்லோரையும் கேட்க வைத்திருக்கிறார்.அவருக்கு இந்தத் தொடர் பெரும் அடையாளமாக இருக்கும்.
நாற்பது ஆண்டுகள் விருதுநகர் அரசியலைத் தன் கைக்குள் வைத்திருக்கும் சரத்லோகிததாஸ் சக்கரநாற்காலியில் அமர்ந்துகொண்டே செய்யும் செயல் பல விமர்சனங்களுக்கு வழிவகுக்கக்கூடியவை.
கலையரசன், பவன், பிரேம்குமார், லகுபரன், விஜிசந்திரசேகர், வேலராமமூர்த்தி, பக்ஸ் உட்பட தொடரில் நடித்திருக்கும் அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் காட்சிகளில் சூடு தெரிகிறது.சிறப்பாக நடிப்பவர்களை தன் ஒளிப்பதிவுக்கருவியால் பல இடங்களில் அடையாளம் காட்டுகிறார்.
ஜீ5 இணையத்தில் ஒன்பது பாகங்களாக ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் திரைப்படமாக வந்திருந்தால் ஒவ்வோர் திரையரங்கும் செங்களமாக மாறியிருக்கும்.
– கிருஷ்ணன்











