சினிமா செய்திகள்

இயக்குநர் வெற்றிமாறனின் நற்செயல் – வியக்கும் திரையுலகம்

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என இயக்கிய எல்லாப்படங்களும் வெற்றி மற்றும் பல விருதுகளை வென்றிருக்கின்றன. இவற்றிற்கிடையே காக்காமுட்டை போன்ற படங்களைத் தயாரித்து அதிலும் வெற்றியோடு பல விருதுகள் என வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச் 31 இல் விடுதலை படம் வெளியாகவிருக்கிறது.

அப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் வெற்றிமாறன் அதற்கு நடுவே அவரிடம் பணியாற்றும் சுமார் இருபத்தைந்து பேர்களுக்கு செய்திருக்கும் உதவி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஆம், அவரிடம் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே அனைவருக்கும் நிலம் வாங்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதை சத்தமின்றி அவர்களுக்குக் கொடுத்துவிட எண்ணியிருக்கிறார் வெற்றிமாறன்.

ஆனால், இவ்வளவு பேருக்கு நிலம் கொடுப்பதை ஒரு நிகழ்ச்சியாக நடத்தவேண்டும் என்று உதவிபெறுபவர்கள் விரும்பியதைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவை சிறப்பு அழைப்பாளராகக் கொண்டு அந்நிகழ்வு நடைபெறவிருக்கிறதாம்.

விடுதலை படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு அந்த நிகழ்ச்சி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

தாம் எடுக்கும் படங்களில் உலகம் வியக்கும் கருத்துகளைப் பேசும் எல்லோரும் சொல்லுக்கேற்ப நடந்துகொள்வதில்லை. அவர்களுடைய நிஜ வாழ்க்கை இவரா இப்படிப் படம் எடுத்தவர்? என்று கேட்கிற மாதிரிதான் இருக்கும்.

ஆனால், வெற்றிமாறன் திரைப்படங்கள் எடுப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் திரைத்துறைக்குள் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமின்றி நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளிலும் தம் கருத்தைப் பதிவு செய்வது, அதற்கான போராட்டங்களில் பங்கு பெறுவது என்று சமுதாயப் பொறுப்பையும் வரவேற்கத் தக்க வகையில் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்.

திரைப்படத்துறையில் எளிய குடும்பத்தைச் சார்ந்த திறமை வாய்ந்தவர்களும் பங்கேற்கும் வண்ணம் பயிற்சிப்பட்டறை நடத்தி வருகிறார்.

இப்போது உதவி இயக்குநர்களின் வாழ்நாள் கனவான சொந்தவீடு என்பதற்கு வடிவம் கொடுத்திருப்பது திரைத்துறை வட்டாரங்களில் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts