September 26, 2026
விமர்சனம்

குட் டே – திரைப்பட விமர்சனம்

மது உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையானவர்கள் குற்றவாளிகள் தீண்டத்தகாதவர்கள் இழிபிறவிகள் என்கிற பொதுக்கருத்தோட்டம் சமுதாயத்தில் உண்டு.அதனால் மதுவின் தீமைகளை விளக்கி அதற்கு ஆட்பட்டவர்கள் அதிலிருந்து மீளவேண்டும் என்கிற நோக்கத்தோடு நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. மதுக்குடிப்போரை இழிவாக எண்ணும் குணம் படைத்தோரையும் சிந்திக்க வைக்கிற படமாக வந்திருப்பதுதான் குட் டே(நல்ல நாள்).

வேலை செய்யும் இடம், குடும்பம், நண்பர், வீட்டு உரிமையாளர் ஆகியோரால் அவமானப்படும் நாயகன், அதற்கு மருந்தாக குடியை நாடுகிறார்.அதனால் அவருக்குக் கிடைக்கும் இன்பம் சிறுதுளி.துன்பம் பெருமழை.நாயகனுக்கு என்னவெல்லாம் நடந்தன? அவற்றின் விளைவென்ன? முடிவென்ன? ஆகியனவற்றுக்கான விடைகளை சுவையாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

குடிகாரராக நடித்திருக்கும் பிருத்விராஜ் ராமலிங்கம், நிஜ குடிகாரர்களைப் போலவே இருக்கிறார்.எதிர்பாராமல் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் அவர் தடுமாறி தடம் மாறும் காட்சிகளில் சரியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் காளிவெங்கட், நாயகனின் கல்லூரித் தோழியாக நடித்திருக்கும் நந்தினி, அவருடைய கணவராக வரும் ஆடுகளம் முருகதாஸ், தையல்காரராக இருக்கும் பகவதிபெருமாள், சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்யும் வேலராமமூர்த்தி,காவல் ஆய்வாளர் விஜய்முருகன் மற்றும் போஸ்வெங்கட் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேடத்தை உணர்ந்து அதற்கேற்ப நடித்து படம் பார்ப்பதை இலகுவாக்கியிருக்கிறார்கள்.ஒரு காட்சியில் மட்டும் வந்து கைதட்டல் பெறுகிறார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசையும் பொருத்தம்.கார்த்திக் நேத்தாவின் வரிகளில் இருக்கும் உண்மை சுடுகிறது.

மதன் குணதேவ், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய இரண்டு முக்கிய பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.இரண்டிலும் தாழ்வில்லை.

பூர்ணா ஜே.எஸ்.மைக்கேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.முக்கியமான விசயத்தைக் கையாளுகிறோம் என்கிற பொறுப்புடன் பணியாற்றியிருக்கிறார்.

என்.அரவிந்தன் இயக்கியிருக்கிறார்.இன்றைய சமுதாயத்தைப் பெரிதும் ஆட்டிப்படைக்கும் ஒரு விசயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அதை ஒற்றைப் பார்வையில் பார்க்காமல் பதினாறு கோணங்களிலும் பார்க்க முயன்றிருக்கிறார்.அதனால் பார்வையாளர்களுக்குப் பல புதிய வெளிச்சங்கள் கிடைக்கின்றன.

திருப்பூர் போன்ற ஒரு தொழில்நகரத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது உட்பட பல நுட்பமான விசயங்கள் படத்தில் பேசப்பட்டிருக்கின்றன.

நல்ல நாள் – நல்ல படம்

– இளையவன்

Related Posts