கிஸ் பட வெளியீட்டில் சிக்கல் – விவரம்
கவின் நடிக்கும் படம் கிஸ்.நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது.
சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார்.ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ் பணியாற்ற, சூர்யா ராஜீவன் கலை இயக்கம் செய்கிறார்.
தொடங்கும்போது, முழுமூச்சாகப் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள்.விட்டு விட்டு நடந்தாலும் விடாமல் படப்பிடிப்பு நடந்தது.சனவரியில் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டார்கள்.ஜூலை வெளியீடு என்று மட்டும் ஜூன் மாதம் அறிவித்திருந்தார்கள்.அதேநேரம், ஜூலை 25 வெள்ளிக்கிழமை அன்று இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.
அதற்குக் காரணம், கிஸ் படத்தைத் தயாரித்திருக்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், ஜூலை 4 ஆம் தேதி பறந்து போ என்கிற படத்தையும் ஜுலை 11 ஆம் தேதி ஓகோ எந்தன் பேபி என்கிற திரைப்படத்தையும் வெளியிடவிருக்கிறது.
அதனால் ஜூலை 25 ஆம் தேதி இந்தப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.
அதற்குக் காரணம், ஜூன் 20 ஆம் தேதி வெளியான குபேரா படம் என்று சொல்லப்படுகிறது.அந்தப்படத்தையும் தமிழ்நாடு திரையரங்குகளில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்தான் வெளியிட்டது. அந்தப்படம் தமிழ்நாட்டில் சரியாகப் போகவில்லை என்பதால் அதில் பெரிய நட்டம் ஏற்படும் என்கிற நிலை.
இந்நிலையில், அந்நிறுவனம் தயாரித்திருக்கும் படத்தை வெளியிட்டால் நிறையத் தொகை தேவைப்படும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
பறந்து போ, ஓகோ எந்தன் பேபி ஆகிய படங்களைத் தயாரித்திருப்பது வெவ்வேறு நிறுவனங்கள் என்பதால் அவற்றை வெளியிடுவதில் எந்தச் சிக்கலும் இருக்காதென்றும், கிஸ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்திருப்பதால்தான் அதை வெளியிடச் சிக்கல் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால்தான் கிஸ் படம் அவர்கள் அறிவித்தபடி ஜூலையில் வெளியாகாது என்று சொல்லப்படுகிறது. இந்தத் தகவலால் இயக்குநர் சதீஷ்,நாயகன் கவின் உட்பட கிஸ் படக்குழுவினர் அனைவரும் கடும் வருத்தத்தில் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.









