துணை நிற்கும் சன் டிவி பிரகாசமாகும் ப்ளடிபெக்கர்

நடிகர் கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் நெல்சன் தனது‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை சுமார் பனிரெண்டு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.கருடன் உள்ளிட்ட படங்களை வெளியிட்ட ஃபைவ்ஸ்டார் செந்தில் குழுவினர் வாங்கியிருக்கிறார்கள்.
இப்படம் இவ்வாண்டு தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே தீபாவளி நாளில் ஜெயம்ரவியின் பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன.அப்படங்களை விளம்பரப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால்,ப்ளடிபெக்கர் படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்பதால் அப்படம் வெளியாகுமா? என்கிற கேள்விகளும் ஐயங்களும் எழத்தொடங்கின.
அந்தக் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து கண்டிப்பாக தீபாவளியில் வெளியாகும் என்பதைச் சொல்லும் விதமாக,இப்படத்தின் சில காட்சிகள் நாளை வெளியிடப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 18 ஆம் தேதி இப்படத்தின் இசைவெளியீடு நடக்கவிருக்கிறது.அதன்பின் சில நாட்களில் படத்தின் முன்னோட்டம் வெளியிடுவது எனத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதோடு இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.அதனால் இப்படத்தை விளம்பரப்படுத்துவதில் அத்தொலைக்காட்சி துணை நிற்கிறதாம்.
வரிசையாக அத்தொலைக்காட்சியில் படம் தொடர்பான சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவிருக்கின்றன என்றும் அவை ஒவ்வொன்றும் வரவர படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று நம்பிக்கையாக இருக்கிறார் தயாரிப்பாளர் நெல்சன்.
இவை எல்லாவற்றையும் விட,திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னான இணைய வெளியீட்டு உரிமைக்காக இந்தப்படத்தைப் பார்த்த நிறுவனத்தினர், படம் மிகவும் நன்றாக இருக்கிறது படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகளை விட செண்டிமெண்ட் காட்சிகள் பெரும் பலமாக அமைந்திருக்கின்றன.எனவே கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் தயாரிப்பாளர் நெல்சன்,இயக்குநர் சிவபாலன், நாயகன் கவின் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.