சினிமா செய்திகள்

ஜெயம்ரவியின் 34 ஆவது படம் அறிவிப்பு – நாயகி இவர்தான்

ஜெயம் ரவி,பிரியங்கா மோகன்,பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,பிரதர் திரைப்படத்தைத் தயாரித்துள்ள ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது.

அதுகுறித்து அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஜெ ஆர் 34’ என்று அழைக்கப்படும் ஜெயம் ரவியின் 34 ஆவது படத்தை ‘டாடா’ வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது. ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஜெயம் ரவி உடன் ஸ்கிரீன் சீன் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பிரதர்’ திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ‘ஜெ ஆர் 34’ திரைப்படத்திற்காக ஸ்கிரீன் சீன் மீடியா மற்றும் ஜெயம் ரவியுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கைகோர்க்கிறார்.

டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகவிருப்பதாகவும் இது ஜெயம்ரவியை முற்றிலும் மாறுபடுத்திக் காட்டும் என்றும் சொல்கிறார்கள்.

மேலும் இந்தப்படத்தில் நாயகியாக நடிப்பவர் பற்றிய விவரமும் தெரியவந்துள்ளது.

இப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக தவ்திஜிவால் எனும் புதுமுக நாயகி நடிக்கவிருக்கிறார்.

இவர் யார் தெரியுமா?

இவர் தற்போது தமிழ்நாடு காவல்துறைத் தலைவராக (டிஜிபி) இருக்கும் சங்கர்ஜிவால் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கவிருந்த படத்திலும் அதன்பின் ஜீவா நடிக்கவிருந்த படத்திலும் இவர் அறிமுகமாகவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால்,அப்படங்கள் நடக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.இதனால் புது நாயகி தவ்திஜிவால் மன வருத்தத்தில் இருந்தார்.

இப்போது தள்ளிப்போனது நல்லது என்பதுபோல் முதல்படத்திலேயே ஜெயம்ரவிக்கு இணையராக நடிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது என்று அவரைச் சார்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

Related Posts