சினிமா செய்திகள் நடிகர்

கே.பாலச்சந்தர் வீடு ஏலத்துக்கு வந்திருக்கிறது. ரஜினி என்ன செய்யப்போகிறார்?

பிப்ரவரி 11,2018 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இந்த அறிவிப்பைப் பார்க்கும் போது ஒரு கணம் கண்களை நம்பமுடியவில்லை, படிக்கும் போதே தவறுதலான பிரசுரிப்பாக இது இருக்க வேண்டுமே என வரிக்கு வரி மனம் இறைஞ்சியது, ஆனால் செய்தி உண்மை தான்.

UCO வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் இயக்குனர் சிகரம் தெய்வதிரு கே.பாலச்சந்தர் அவர்களின் கவிதாலயா புரொடக்சன்ஸ் மற்றும் அவரது வீடு உள்ளிட்டவை ஏலத்துக்கு வர இருக்கின்றன. அதற்கான பொது ஏல அறிவிப்பு செய்தியே அது.

தமிழ் இதயங்களுக்கு இயக்குனர் பாலச்சந்தரைப் பற்றி சொல்லிலோ இல்லை சொல்லியோ இனி புரிய வைக்க தேவையில்லை, அவரது படைப்புகள் இன்றி தமிழ் சினிமா இவ்வளவு தூரம் பயணித்திருக்காது. தமிழ் சினிமாவின் பிதாமகர்.

உலக நாயகனுக்கும் சரி, தமிழ் உலகை ஆள முனையும் நாயகனுக்கும் இவர் திரையுலக குருநாதர் என்பதையும் கடந்து தந்தை போல உடன் இருந்தவர். தன் வளர்ப்புகள் சிகரம் தொட்டு விட்டார்கள், கோடிகளில் வருவாய் ஈட்டுகிறார்கள் என்ற போதிலும் அது உங்க உழைப்புயா, அதில் இருக்கும் கஷ்டம் எனக்கு தெரியாதா என சொல்பவர், இறுதிவரை எவ்வித தனிப்பட்ட உதவிகளையும் எதிர்பார்க்காது வாழ்ந்து மறைந்த ஒரு மாண்புற்ற மனிதன் வாழ்ந்த வீடு இப்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

இந்த அவலம் நடிகர் சங்கத்துக்கோ, ரஜினி, கமலுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். நிச்சயம் கே.பி தன் கஷ்டம் வெளியில் தெரிவதை விரும்ப மாட்டார். அப்பாக்கள் என்றுமே அப்படித்தான், கஷ்டங்களை மறைத்து விட்டு கடைசி வரை கொடுத்தே வாழ்ந்திருப்பார்கள், ஆனால் மகன்களாக தங்களை காட்டிக்கொள்ளும் தமிழ்த் திரையுலகம் ,குறிப்பாக நடிகர் சங்கம்,இயக்குனர் அமைப்புகள் உதவி செய்ய வேண்டிய நேரமிது.

‘அண்ணாமலை’ படத்தில் ஒரு காட்சி வரும், நண்பனாக இருந்து எதிரியாக மாறிய அசோக்கின் வீடு இறுதியில் ஏலத்திற்கு வரும், அண்ணாமலை அதை ஏலத்தில் எடுத்து தன் அன்னையிடம் கொடுத்து மீண்டும் நண்பனுக்கே தருவார். அவரது அன்னை உச்சி முகர்ந்து ” என் மகன் அண்ணாமலை மாறல ” என நெகிழ்ந்து போவார். அப்படத்தைத் தயாரித்த கவிதாலயா புரொடக்சன்ஸ் , திருமதி ராஜம் பாலச்சந்தர் அவர்களின் வீடு இப்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது, அண்ணாமலை என்ன செய்யப் போகிறார் ?

– ஹரி

Related Posts