சினிமா செய்திகள்

சமந்தா படங்களைப் புறக்கணிப்போம் – தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிப்பு

இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா ஆகியோர் நடிப்பில் அமேசான் பிரைமில், ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும், ‘தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடர் 2 க்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் நேரடியாகத் தயாரித்திருக்குமர, ‘தி ஃபேமிலி மேன்’ என்ற இணையத் தொடரின் புதிய முன்னோட்டத்தை மே 19 ஆம் தேதியன்று வெளியிட்டது.

அதில், தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், ம.தி.மு.க பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ,நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி நாளை மறுநாள் அத்தொடர் வெளியாகவுள்ளது.

இதனால் தமிழ் உணர்வாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

எங்கள் உணர்ச்சிகளை அவமதித்தவர்கள் எல்லோரும் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள்.இப்படத்தின் இயக்குநர்கள் தொடரில் அப்படி எதுவும் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.ஆனால் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருக்கும் சமந்தா எதுவுமே பேசவில்லை.

இந்தத் தொடரை ஒளிபரப்பவே கூடாது, மீறி ஒளிபரப்புனால் படத்தில் இடம்பெற்றுள்ள சமந்தா உள்ளிட்ட அனைவரது அடுத்தடுத்த படங்களையும் புறக்கணிப்போம், இதை ஓர் இயக்கமாக நடத்துவோம் என்று தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

Related Posts