February 4, 2023
சினிமா செய்திகள்

வாரிசு வசூல் கணக்கு பொய் என திருப்பூர் சுப்பிரமணியன் சொன்னது ஏன்?

2023 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 11 ஆம் தேதி, விஜய் நடித்த வாரிசு படமும் அஜீத் நடித்த துணிவு படமும் வெளியானது.

இவ்விரு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.அதேசமயம் நல்ல வசூலையும் பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சனவரி 18 அன்று வாரிசு படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம், வாரிசு திரைப்படம் உலக அளவில் 210 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக அறிவித்தது.

இது விஜய் இரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. விஜய்தான் வசூலில் நம்பர் ஒன் என்பதை இது நிரூபித்துள்ளதாகச் சொல்லி அதைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவரும் பிரபல விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியன், ஏழுநாட்களில் 210 கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.

அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு படத்தின் உண்மையான வசூல் நிலவரம் அந்த நிறுவனத்துக்கே தெரியாது எனும்போது திருப்பூர் சுப்பிரமணியத்துக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதோடு ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அந்தப்பட நிறுவனம் அப்படத்தை மேலும் ஓட வைக்க இதுபோன்ற விளம்பரங்கள் செய்வது வழக்கம். இது திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு நன்கு தெரியும். இன்னும் சொல்லப்போனால் அவரே பலமுறை இவ்வாறு செய்துள்ளார்.

அப்படியிருக்கும்போது இப்போது வாரிசு வசூல் கணக்கு பொய் என அவர் வெளிப்படையாகப் பேசவேண்டிய அவசியம் என்ன?

இதுகுறித்து இரண்டுவிதமான தகவல்கள் உலவுகின்றன.

ஒன்று, ஊடகத்தினர் இதுகுறித்துக் கேட்டபோது பேச்சுவாக்கில் அப்படிச் சொல்லிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இன்னொன்று,வாரிசுக்குப் போட்டியாக வந்த துணிவு படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்தப்படம் திருப்பூர் சுப்பிரமணியனின் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. அவற்றின் கணக்கில் சில குளறுபடிகளை திருப்பூர் சுப்பிரமணியன் செய்துவிட்டதாகவும் அதனால், ரெட்ஜெயண்ட் நிறுவனத்தினர் அவர் மீது கோபமாக இருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் இப்படி பேட்டி கொடுத்து அவர்களைச் சாந்தப்படுத்த முயல்கிறார் என்று சொல்கிறார்கள்.

எப்படியிருப்பினும் ஒரு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை பொய்க்கணக்கு என்று திருப்பூர் சுப்பிரமணியன் சொன்னது தப்பு என்பதே பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது.

Related Posts