விமர்சனம்

டூ லெட் – திரைப்பட விமர்சனம்

சென்னை போய் இருபது வருசமாச்சு என்ன சாதிச்சே? என்று கேட்டதற்கு சென்னையில் இருபது வருசமா இருப்பதே சாதனைதான் என்று சொன்னார் ஒருவர்.

அந்தச்சாதனைகளில் ஒன்று இருப்பிடம். சாமானியர்கள் அதற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன்.

தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையாகவும் கண்களில் கண்ணீரோடு காணவேண்டிய கட்டாயத்தில் காட்சிகளையும் செழியன் வடிவமைத்திருக்கிறார்.

அவர் வரைந்த ஒவியத்துக்கு சந்தோஷ், ஷீலா, குழந்தை தருண் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ஏம்ப்பா உனக்கு சொந்தமா வீடு இல்ல என்று குழந்தை கேட்கும் தருணமும் சுவற்றில் வரைந்த ஓவியங்களை அழிக்கும் காட்சியும் கொடுக்கும் வலி பெரிது.

ஒரு வீட்டைக் கட்டிட்டு நாட்டுக்கே தலைவர் ஆன மாதிரி அவன் பண்ற அழிச்சாட்டியம் இருக்கே என்று வீட்டுச்சொந்தக்காரர் பற்றிப் புலம்பாதவர் மிகக்குறைவு.

அப்படிச்சொல்பவர்கள் எல்லாம் இனிமேல் டூலெட் படத்து ஆதிரா மாதிரி என்று எடுத்துக்காட்டக்கூடிய அளவில் கொடுமையான வீட்டு உரிமையாளராக வாழ்ந்திருக்கிறார் ஆதிரா.

கவிஞர் ரவிசுப்பிரமணியன்,இதழாளர் அருள் எழிலன், எழுத்தாளர் எம்.கே.மணி உள்ளிட்ட சிலர் வருகிற ஓரிரு காட்சிகளிலும் கவனிக்கவைக்கிறார்கள்.

வெஜிடேரியனா, கறுப்புச்சட்டை போடாதே, நீங்க என்ன ஆளுங்க? ஆகியன உள்ளிட்ட பல ஒற்றைச்சொற்களில் அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் பெரிய பெரிய கதைகளை நினைவூட்டுகிறார் செழியன்.

சொந்தவீடு என்கிற நடுத்தர வர்க்கத்தின் ஆசையைத் தூண்டி அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் பெருமுதலாளிகளுக்குப் பலம் சேர்க்கக்கூடிய கருத்தைக் கொண்டிருந்தாலும்,

நாடில்லாதவன் மட்டும் அகதி இல்லை வீடு இல்லாதவனும் அகதிதான் என்றுணர வைக்கும் படம் இது என்பதில் மாற்றமில்லை.

Related Posts