சினிமா செய்திகள்

ஸ்டார் வெளியீடு ஒரு வாரம் தள்ளிப்போனது ஏன்?

கவின் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஸ்டார்.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எழிலரசு ஸ்டார் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் மே பத்தாம் தேதியன்று வெளியாகுமென இன்று மாலை ஆறு மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இப்படத்தை மே மூன்றாம் தேதியன்றே வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இப்போது ஒரு வாரம் தள்ளி மே 10 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம் தள்ளிப்போனது ஏன்?

ஏப்ரல் 26 ஆம் தேதி ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் வெளியாகவிருக்கிறது. அதேநாளில் சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படமும் வெளியாகவிருந்தது.

இந்நிலையில், விஷால் கொடுத்த ஒரு நேர்காணல் திரையுலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், சினிமாவுக்கே சொந்தக்காரர் போல் நடக்கிறார்.அவர் என்னுடைய் மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டபோது அதைத் தள்ளிப்போடுங்கள் என்றார்.அதை நான் கேட்கவில்லை.இப்போது ரத்னம் படம் வெளியாகும்போதும் தொந்தரவு செய்வார் என்று பேட்டி கொடுத்தார்.

இதனால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரெட்ஜெயண்ட் வெளியீடாக வரவிருக்கும் அரண்மனை 4 படத்தை ஏப்ரல் 26 அன்றே வெளியிட்டால் விஷால் சொன்னதுபோல் ரத்னம் படத்துக்கு இடையூறாக அரண்மனை 4 படத்தை வெளியிட்டுவிட்டார்கள் என்கிற விமர்சனங்கள் வரும்.

எனவே, சுந்தர்.சியே நடிகர் விஷாலைத் தொடர்பு கொண்டு, ஏப்ரல் 26 இல் நாங்கள் வரவில்லை ஒரு வாரம் தள்ளி மே 3 ஆம் தேதி வருகிறோம் என்று சொல்லிவிட்டாராம்.

அரண்மனை 4 மட்டுமின்றி ஸ்டார் படத்தையும் ரெட்ஜெயண்ட் நிறுவனமே வெளியிடும் என்று சொல்லப்படுகிறது.அதேசமயம், ரெட்ஜெயண்ட் நிறுவனம் கொடுக்கும் முன் தொகை குறைவு என்பதால் வேறு சிலரிடமும் ஸ்டார் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டைக் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

எப்படியிருந்தாலும் மே மூன்றாம் தேதி ஸ்டார் மட்டும் தனியாக வெளியாகவிருந்தது.இப்போது அரண்மனை 4 அந்தத் தேதிக்கு வந்துவிட்டதால் மே 3 ஆம் தேதியில் இருந்த ஸ்டார் படத்தை மே 10 ஆம் தேதிக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள்.

ஸ்டார் படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறதா? அல்லது வேறு விநியோகஸ்தரிடம் போகப்போகிறதா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

Related Posts