இனி நாயகனாக நடிப்பதில்லை – சந்தானம் திடீர் மனமாற்றம்

சந்தானம் நடிப்பில் பிரேம்ஆனந்த் இயக்கத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படம் மே 16 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இதற்கடுத்து கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த படங்களைக் காலவரையற்று தள்ளி வைத்துவிட்டாராம் சந்தானம்.
என்ன காரணம்?
சிம்பு நடிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சந்தானம்.
கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு மீண்டும் மற்ற கதாநாயகர்களுட்ன் இணைந்து நகைச்சுவை வேடத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார் சந்தானம்.
அவரை நகைச்சுவை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சிம்பு என்பதால் அந்த நன்றிக்கடனுக்காக அவருடன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அந்தப்படத்துக்காக சம்பளம் பேசியபோது சுமார் பத்து கோடி சம்பளம் கேட்டாராம் சந்தானம்.படக்குழுவோ அவ்வளவு தர முடியாது என்று சொல்லியிருக்கிறது.அதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் சுமார் ஏழு கோடி சம்பளம் என முடிவாகியிருக்கிறதாம்.
இதுதான் சந்தானத்தின் திடீர் மனமாற்றத்துக்குக் காரணமாகிவிட்டது என்கிறார்கள்.
கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கு நாலு கோடி சம்பளம் கேட்டாலே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.வெற்றி இல்லை வியாபாரம் இல்லை என்று ஏதாவது சொல்லி சம்பளத்தைக் குறைத்துப் பேசுவார்கள்.
ஆனால் இன்னொரு நாயகனோடு நடிக்கும் படத்துக்கு அதைவிட அதிகச் சம்பளம் கிடைக்கிறது.எனவே இந்த வழியை இன்னும் சில படங்களுக்குத் தொடர்வோம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.
அந்த முடிவுக்குக் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.சிம்பு படத்தைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம் சந்தானம்.அப்படத்திலும் அவருக்குப் பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.இப்போது வெளியாகவிருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் தயாரிப்பாளர்களில் ஆர்யாவும் ஒருவர் என்பதால் ஆர்யாவோடு இணைந்து இன்னொரு நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம் சந்தானம்.
இவ்விரு படங்களும் இவ்வாண்டுக்குள் தயாராகிவிடும் என்றும் அவை வெளியாகும்போது கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்து எந்த வழியில் பயணிப்பது என்கிற முடிவை எடுத்துக் கொள்ளலாம் என எண்ணியிருக்கிறாராம் சந்தானம்.
சந்தானத்தின் இந்தத் திடீர் முடிவால் அவரை நாயகனாக வைத்துப் படம் இயக்கத் தயாராகிக் கொண்டிருந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.