கமல் கொடுத்த தேதிகள் ஷங்கர் கேட்ட தொகை – இந்தியன் 2 ஆச்சரியங்கள்
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2.
இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைக் கடந்து ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது.
சிலநாட்கள் நடந்த அந்தப் படப்பிடிப்பில் கமல் பங்குபெறாத காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பில் நாளை மறுநாள் முதல் அதாவது செப்டம்பர் 22 முதல் கமல் கலந்துகொள்ளவிருக்கிறார்.
முதல் மூன்று நாட்கள் சென்னையிலும் அதன்பின் தலக்கோணத்திலும் நடக்கும் படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.
அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறுகளில் பிக்பாஸ் படப்பிடிப்பு வாரநாட்களில் இந்தியன் 2 படப்பிடிப்பு என்று தேதி கொடுத்திருக்கிறாராம் கமல்.படம் நிறைவாக அமையும்வரை எடுங்கள் என்று சொல்லி அவர் தேதி கொடுத்திருப்பதால் ஷங்கருக்கு மகிழ்ச்சி.
அதனால், வேகமாக படத்தை முடித்துக்கொடுத்துவிடுவேன் என்று இயக்குநர் ஷங்கர் உறுதியளித்துள்ளாராம்.
அதோடு, மொத்தப் படப்பிடிப்புக்கும் அவர் கேட்டிருக்கும் செலவுத்தொகை ஏற்கெனவே சொன்ன தொகையிலிருந்து குறைவாக அமைந்திருப்பதால் தயாரிப்பு நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எப்படியோ எல்லாச் சிக்கல்களையும் தாண்டி அந்தப்படம் வேகமாக வளருகிறது என்பது அந்தப்படக்குழுவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகுக்குமே நல்லது என்கிறார்கள்.











