சினிமா செய்திகள்

கானா பாடகி இசைவாணியின் சோகம் – காவல்துறையில் புகார்

பிரபல கானா பாடகி இசைவாணி.பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்‌ஷன் நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகியனவற்றின் மூலம் புகழ்பெற்றவர் இசைவாணி.

2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பாடகி இசைவாணி இடம்பிடித்தவர். உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி வெளீயிட்டபோது அதில் அவர் இடம்பிடித்திருந்தார்.

ஆண்கள் மட்டுமே கானா பாடலில் கோலோச்சிக் கொண்டிந்த நிலையில், பெண்களாலும் கானா பாடல் பாட முடியும் என்பதை நிரூபித்த இசைவாணி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரையில் வானம் விடிஞ்சிடுச்சி என்ற பாடலில் இவர் பாடிய கானா பகுதி பலரையும் ஈர்த்தது.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சக கானா பாடகர் சதீஷ் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இசைவாணி திருமணம் ஆன சில ஆண்டுகளில் கணவரை விட்டுப் பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இசைவாணி.

விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால் தனக்கும் தன் கலைப் பயணத்திற்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்ற நிலையில் சதீஷ் வேறொரு பெண்ணை மணந்து கொண்டு, தன்னை மனைவி எனக் குறிப்பிட்டு இசை நிகழ்ச்சிகளில் பாட வைக்கிறேன் எனக் கூறி பணம் பெற்றுள்ளதாகவும், பணத்தைக் கொடுத்தவர்கள் தற்போது தன்னிடம் வந்து கேட்பதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார் இசைவாணி.

Related Posts