கம்பேக் டென்ஹவர்ஸ் வில்லன் சத்யராஜ் விஜய் கட்சி – மனம் திறக்கும் சிபிராஜ்

சிபிராஜ் நடித்துள்ள 10 ஹவர்ஸ் படம் ஏப்ரல் 18 அன்று வெளியாகவிருக்கிறது.அறிமுக இயக்குநர் இளையராஜா இயக்கியிருக்கிறார்.துப்பறிவாளன் உள்ளிட்டு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.மலேசியாவைச் சேர்ந்த வினோத் என்பவர் தயாரித்திருக்கிறார்.
மர்டர் மிஸ்ட்ரியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இப்படம் குறித்து படக்குழு எவ்வித அறிவிப்போ விளம்பரமோ செய்யாத நிலையிலும் இப்படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு பிரபல விநியோகஸ்தரும் தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் ஃபைவ் ஸ்டார் செந்தில் இப்படத்தின் மொத்த உரிமையையும் வாங்கினார்.இப்போது தமிழ்நாடெங்கும் அவரே வெளியிடுகிறார்.
இதனால் நாயகன் சிபிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நாயகன் சிபிராஜுடன் ஒரு நேர்காணல்….
1. 10 ஹவர்ஸ் படத்தின் அருமை இப்போது எல்லோருக்கும் தெரிகிறது. இக்கதை வெற்றி பெறும் கதை என முதன்முதலில் நீங்கள் உணர்ந்தது எப்படி?
இந்தப் படத்தைப் பொறுத்தவரை முதலில் இளையராஜா கதை சொன்ன போதே பிடித்திருந்தது.அதன்பின் பவுண்டட் ஸ்கிரிப்ட் படித்தவுடன் இன்னும் பிடித்துப்போனது.நான் இதற்கு முன்பே நிறைய த்ரில்லர் படம் பண்ணியிருக்கேன்,போலீஸா பண்ணியிருக்கேன்.தொடர்ந்து அதேமாதிரி படங்கள் பண்ணக்கூடாதுன்னு நினைச்சுகிட்டிருந்தேன்.ஆனா இளையராஜா இந்தக் கதையைச் சொன்னபோது இதை மிஸ் பண்ணிவிடக்கூடாதுன்னு நெனச்சேன்.இப்போ படம் தயாரானதும் பார்த்தா அவர் என்ன திரைக்கதையைப் படிக்கக் கொடுத்தாரோ அதை அப்படியே படமாகக் எடுத்திருக்கார்.அது ரொம்ப சந்தோசம்.அதோட இந்தப்படத்த லீடிங் டிஸ்டிரிபியூட்டர் ஃபைவ்ஸ்டார் செந்தில் வாங்கி ரிலீஸ் பண்ணுறது கூடுதல் சந்தோசம்.
2. வெளியீட்டுக்கு முன் நல்ல விலைக்கு விற்பனை, அடுத்தடுத்த விற்பனைகளில் போட்டி என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
ஒரு சின்னபடம் அல்லது மீடியம் பட்ஜெட் படத்துக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பது ரிலீசுக்கு முன்னால அந்தப்படம் வியாபாரம் ஆவதுதான்.அந்த வகையில் இந்தப் படத்தை ஃபைவ்ஸ்டார் செந்தில் வாங்கியதும் அதன்பின் தெலுங்கு உரிமையை பெல்லகொண்டா சுரேஷ் வாங்கியதும் அதைத் தொடர்ந்து ஓடிடி விற்பனையும் நல்லபடியா நடந்திருக்கு.இது போன்ற நிகழ்வு படக்குழுவுக்கும் ஹீரோவுக்கும் பெருமை தரக்கூடியது.

ten hours
3. இந்தப்பட இயக்குநர் மற்றும் உடன் நடித்தோர் பற்றி?
இந்தப்பட இயக்குநர் இளையராஜா,நான் நடிச்ச ரங்கா படத்துல கோ டைரக்டரா வேலை செஞ்சார்.அந்தப்படம் முடிஞ்சதுமே டென்ஹவர்ஸ் படத்தோட கதையைச் சொன்னார்.மிகக் கடின உழைப்பாளி.செட்ல ரொம்ப அமைதியா இருப்பார்.ஆனா வேலை வேகமாக நடக்கும்.புது இயக்குநருக்கு இருக்கிற மிகப்பெரிய சவாலே எழுத்தில் இருக்கும் கதையை அப்படியே திரையில் கொண்டுவருவதுதான்.அதை மிக அழகாகக் கொண்டுவந்திருக்கிறார்.இந்தப்படத்தில் கஜராஜ் சார்,ஆடுகளம் முருகதாஸ் ஜீவாரவி உட்பட பலர் நடிச்சிருக்காங்க.எல்லாரும் நல்லா பண்ணியிருக்காங்க.
4. இந்தப்பட வெளியீடு தள்ளித் தள்ளிப் போனது ஏன்?
முதல்ல பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டு அறிவிச்சோம்.ஆனா அப்ப எதிர்பாரா விதமா நிறையப் படங்கள் வந்து குவிஞ்சுருச்சு.அதனால நல்ல தியேட்டர் அதிக ஸ்கீரீன் கிடைப்பது கஷ்டமா இருந்தது.எனவே ரிலீஸ் தள்ளிப் போச்சு.அதுவும் நல்லதுக்குத்தான். இப்ப ஏப்ரல் 18 இல் கோடைவிடுமுறை தொடங்குது.அதனால முன்னைக்காட்டிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நம்பறோம்.
5.உங்கள் படங்களுக்கிடையேயான இடைவெளி அதிகம் ஏன்?
நல்ல கண்டெண்ட்டுக்காகக் காத்திருப்பதுதான் இடைவெளிக்கு முக்கிய காரணம்.2018 டிசம்பர்ல சத்யா ரிலீஸ் ஆச்சு.அப்ப ஆறு படம் ஷூட்டிங் போயிட்டிருந்தது.ஒவ்வொரு படத்துக்கும் வேற வேற கெட்டப் இருந்ததால ஒவ்வொரு படத்துக்கும் கேப் ஆச்சு.அந்தப் படங்கள முடிச்சுக் கொடுக்கவே டைம் ஆயிடுச்சு.அதுக்கப்புறம் வந்த படம்தான் டென்ஹவர்ஸ்.இதுவும் படம் தயாராகி வியாபாரத்துக்காக காத்திருக்கிற மாதிரி ஆச்சு.அதுக்கு பலன் கிடைச்சுருக்கு.
6. ஜாக்சன் துரை 2 மற்றும் மற்ற படங்கள் குறித்து?
ஜாக்சன் துரை 2 இல் முதல்பட டீம் அப்படியே இருக்கு.டைரக்டர் பாலாஜி தரணிதரன்,புரொடியூசர் ஸ்ரீகிரின் சரவணன் எல்லோரும் இருக்காங்க.இதுவரைக்கும் எத்தனையோ படங்கள்ல அப்பா வில்லனா நடிச்சிருக்காங்க.இந்தப்படத்துல முதன்முறையா எனக்கு வில்லனா நடிச்சிருக்காங்க.அது படத்துக்கு பெரிய ஹைலைட்டா இருக்கும்.இந்தப்படம் ஷூட்டிங் போயிட்டிருக்கு,விரைவில் திரைக்கு வரும்.இதில்லாம இதே டைரக்டரோட ரேஞ்சர்னு ஒரு படம் பண்றேன்.இவைதவிர டென் ஹவர்ஸ் டைரக்டர் இளையராஜா கூட ஒரு படம்,டென்ஹவர்ஸ் புரொடியூசர் வினோத் கூட ஒருபடம் ஆகியன அடுத்தடுத்து நடக்கும்.
7. மீண்டும் சொந்தப்படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறதா?
எங்கள் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரியிலும் ஒரு படம் எடுப்பதற்கான பேச்சுகள் நடந்துகிட்டிருக்கு.எல்லாம் முடிவானதும் அறிவிப்போம்.
8. அப்பாவின் சாதனைகளை எட்ட என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
அப்பாவின் சாதனைகளை எட்டணும்னுல்லாம் திட்டம் எதுவும் தீட்டலிங்க.ஏன்னா நான் சினிமாவுக்கு வரும்போதே அவரை ஒரு பெஞ்ச்மார்க்கா வச்சு அந்த இடத்தப் பிடிக்கணும்னு நினைக்கல.சினிமாவுல எனக்குன்னு ஒரு அடையாளத்த உருவாக்கணும்னு தான் நெனச்சேன்.இப்ப என் சம்பந்தப்பட்ட யூடியூப் உள்ளிட்ட இடங்களில், சிபிராஜ் வித்தியாசமான படங்களா தேர்ந்தெடுத்து நடிக்கிறாரு அவரு படங்கள்ல ஏதாவது ஒரு புதுவிசயம் இருக்கும்னு எல்லாரும் கமெண்ட் பண்றாங்க.இதுதான் என்னுடைய அடையாளம்.
9. பிறமொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையே ஏன்?
பிறமொழிப்படங்கள்ல நடிக்கணுகிற ஆசை எனக்கு இருக்கு.இன்னைக்கு இருக்கிற ஓடிடி காலகட்டத்துல எல்லாப் படங்களுமே டப் பண்ணி பிற மொழிகள்ல ரிலீசாகிற வாய்ப்பு இருக்கு.என் படங்களும் அப்படிப் போய்கிட்டிருக்கு.இதைத் தாண்டி தெலுங்கு இந்தி உள்ளிட்ட பிறமொழிகள்ல நல்ல கதை அமைஞ்சா ஹீரோவாகவோ வில்லனாகவோ நடிக்கும் எண்ணமிருக்கு.
10. விஜய் கட்சியில் சேரப்போவதாக ஒரு தகவல் உலவுகிறதே
நான் தளபதி விஜய் அவர்களுடைய தீவிரமான இரசிகன்.காதலுக்கு மரியாதை படத்திலிருந்தே நான் அவருடைய இரசிகன்.இதை எல்லா இடங்கள்ல்யும் சொல்லியிருக்கேன்.அதனால நான் அவருடைய கட்சியில சேரப் போறேன்னு ஒரு சில வதந்திகள் இருக்கலாம்.நான் ஒரு விசயத்த தெளிவுபடுத்த விரும்புறேன்.எனக்கு அரசியல்ல ஆர்வமும் கிடையாது அதுக்கான நாலெட்ஜும் கிடையாது.அரசியலுக்கு ஒருத்தர் வரணும்னா அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவரா இருந்தாலும் அதை விட்டுட்டுத்தான் அரசியலுக்கு வரணும்.அதுக்கு மிகப் பெரிய உதாரணம் விஜய் சார்.அந்தத் தியாகத்துக்குத் தயாரா இருந்தாதான் அரசியலுக்கு வரணும்.என்னைப் பொறுத்தவரைக்கும் என் கவனமெல்லாம் சினிமாவில்தான்.இப்ப டென்ஹவர்ஸ் படம் எனக்கு கம்பேக் படமா இருக்கும். ஆகவே அரசியல் இல்லை.இல்லவே இல்லை.
– அரவிந்த்