சினிமா செய்திகள்

இராகவா லாரன்ஸின் பென்ஸ் படம் கைவிடப்பட்டது?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.லோகேஷ் கனகராஜ் தற்போது படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தை தயாரித்து வழங்கினார்.

அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படத்துக்கு பென்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

அப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே எழுதியிருக்கிறார்.அப்படத்தை ‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

பென்ஸ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14,2024 அன்று வெளியானது.

அதன்பின் அப்படம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

ஆனால் அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது என்று அவ்வப்போது சொல்வார்கள்.ஆனால் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

அண்மையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.

அதனால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்தால் திடீரென இப்போது இந்தப்படம் நடக்காது கைவிடப்பட்டுவிட்டது என்றொரு அதிர்ச்சிச் செய்தி உலாவருகிறது.

ஏன்?

இந்தப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே எழுதுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இப்படத்துக்காக அவர் எழுதிய கதையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாம்.அந்தக் கட்டாயம் எதனால்? என்கிற பெரிய கேள்வி ஒன்று இருக்கிறது.

எதனால் ஏற்பட்டிருந்தாலும் கதையை மாற்றி எழுத கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

இதனாலேயே இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்றும் அதன் காரணமாக, அண்மையில் அறிவிக்கப்பட்ட ராகவா லாரன்சின் 25 ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படத்தை முடித்துவிட்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கும் காஞ்சனா 4 படத்தைத் தொடங்கியாக வேண்டும் என்பதால் இந்தப்படம் நடக்காது கைவிடப்பட்டுவிட்டது என்கிற தகவல் உலவுகிறது.

இதுதொடர்பாக, பென்ஸ் படக்குழு தரப்பில் கேட்டால், இந்தப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.நவம்பர் 3 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

இரண்டில் எது சரி என்பது நவம்பர் முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

Related Posts