கள்ள ஓட்டு, ரஜினிக்காக நீதிபதியிடம் வேண்டுகோள் – களைகட்டியது நடிகர் சங்கத் தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
நடிகர் சங்கத்திலிருந்து பல உறுப்பினர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாகப் பலர் புகார் அளித்தனர். அதனால் தென்சென்னை சங்கங்களின் பதிவாளர், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நடிகர் நாசர் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தலை நிறுத்திவைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இறுதியில், ‘சிலர் அளித்த புகாருக்காக 3000 பேர் அடங்கிய தேர்தலை நிறுத்த முடியாது’ எனக் கூறி பதிவாளர் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தும், நடிகர் சங்கத் தேர்தலுக்கான இடத்தையும் நீதிபதி அறிவித்தார்.
இதனால், நடக்குமா நடக்காதா என்றிருந்த நடிகர் சங்கத் தேர்தல் பல சட்டச்சிக்கல்களைக் கடந்து இன்று மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
3100-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இதில் 1100- க்கும் மேற்பட்டோர் தபால் மூலமும் மீதமுள்ள அனைவரும் நேரிலும் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பற்றிப் பேசிய பாண்டவர் அணியின் விஷால்,நீதியரசர் அளித்த உத்தரவை நாங்கள் முறையாகச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் தீர்ப்பு அளித்த நீதியரசருக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
தேர்தல் பற்றிக் கூறிய பாக்யராஜ், வெற்றி, தோல்வியை நினைத்து தேர்தலில் போட்டியிடவில்லை, சங்கத்தில் தவறு நடைபெறுவதை தெரிந்து, அதை தட்டிக்கேட்கவே போட்டியிடுகிறேன் என்றார்.
கடைசிவரை இழுபறி இருந்தாலும் ஓட்டுப்பதிவு தொடங்கியதும் நடிகர் நடிகைகள் ஆர்வமுடன் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் மைக் மோகன் வந்துள்ளார். ஆனால் அவரது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள வாக்கு பதிவானது என்ற தகவல் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெறும் பொழுது நேரில் வர இயலாதவர்களுக்காக தபால் வாக்குப்பதிவு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி தேர்தல் நடைபெறும் மையத்திற்கு வர இயலாதவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு அனுப்பப்பட்டு உள்ளது.
இதில், தபால் வாக்கு காலதாமதமுடன் வந்த நிலையில் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்துடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ரமணா, பசுபதி ஆகியோர் ஓய்வு பெற்ற நீதிபதியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பத்மநாபனைச் சந்தித்து, தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீட்டித்து வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அதில், பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு சரிவர சென்றடையவில்லை என தெரிவித்தனர்.இதுகுறித்து இதுவரை (காலை 11 மணி) எந்தமுடிவும் வரவில்லை.











