நாகேஷ் திரையரங்கம் – விமர்சனம்

ஒரு வீடு அல்லது பங்களாவுக்குள் நடக்கும் பேய்க்கதையை ஒரு திரையரங்கத்தில் நடக்கிற மாதிரி காட்டி படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் இசாக்.
பேய்க்கதை என்றால் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அவ்வளவும் இந்தப்படத்திலும் இருக்கிறது.
நாயகன் ஆரிக்கு இந்தப்படம் நல்லபெயர் வாங்கித்தரும். எந்த நேரத்திலும் பொய் பேசமாட்டேன் என்று சொல்லுகிற கதாநாயகர்கள் அற்றுப்போய்விட்ட இக்காலத்தில் சின்னச்சின்னதாகவேணும் பொய் பேசியாக வேண்டிய வீட்டுத்தரகர் வேலை செய்தாலும் பொய்யே பேசமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற வேடம். பேய்க்குப் பயப்படுவதும் பேய்க்கே உதவி செய்வதும் என்று எல்லா நேரங்களிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகி ஆஷ்னாசவேரி அழகுப்பதுமையாக வந்து போகிறார். பாடல் காட்சிகளுக்குப் பயன்படுகிறார்.
ஆரியின் தங்கையாக வரும் அதுல்யாரவி வாய்பேச முடியாதவர். கண்களாலேயே பேசுகிறார்.
கொஞ்ச நேரமே வந்தாலும் புதுமுகம் மாசூம் சங்கர் கவனிக்க வைக்கிறார். ஆரியை ஏமாற்றி அவர் செய்யும் சாகசக்காட்சிகள் பதட்டத்துடன் ரசிக்கவைக்கிறது.
நகைச்சுவைக்கு காளிவெங்கட். அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.
நெளசாத்தின் ஒளிப்பதிவும் ட்ராட்ஸ்கிமருதுவின் விஎஃப்எக்ஸும் பேய்ப்படத்துக்கான தன்மையை நன்றாக வெளிப்படுத்த உதவியிருக்கிறது.
அழகிய பெண் எப்படிப் பேயானார் என்பதைச் சொல்ல இயக்குநர் எடுத்திருக்கும் விசயம், மக்களும் அரசும் விழிப்புடன் கவனிக்கவேண்டிய விசயம்.
பேய் எனும் மூடநம்பிக்கையை எடுத்துக்கொண்டாலும் சமூக விழிப்புணர்வுக்காக அதைப் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் இசாக் பாராட்டுக்குரியவர்.
இக்கதையை ஏற்றுக்கொண்டு படமாக்கிய தயாரிப்பாளர் ராஜேந்திர எம்.ராஜனுக்கும் இப்பாராட்டு உரித்தானது.