கிடா – திரைப்பட விமர்சனம்
பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களுக்கானவை.ஆனால், அவை பெரும்பாலும் பெரும்பாலானோருக்குத் திண்டாட்டங்களை ஏற்படுத்துபவை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதார்த்தம்.
அந்த எதார்த்தம், ஓர் அழகிய கலைப்படைப்பாக மாறினால்? அதுதான் கிடா.
விவசாயி பூஇராம், தீபாவளிப் பண்டிகைக்கு தன் பேரனுக்காகப் புத்தாடை வாங்க ஆசைப்படுகிறார்.வறுமை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.எனவே, வீட்டில் இருக்கும் ஆட்டை விற்று அந்தப்பணத்தில் புத்தாடை வாங்க நினைக்கிறார். அந்த ஆடு, பேரனின் அரவணைப்பில் இராஜா போல் இருக்கிறது.ஆடா? புத்தாடையா? என்றால் ஆடுதான் என்கிற உறுதியில் அவன் இருக்கிறான்.
இன்னொரு பக்கம், இந்த ஆட்டை வாங்கி புதிதாகக் கறிக்கடை திறக்க ஆசைப்படுகிறார் காளிவெங்கட்.
இந்நிலையில், அந்த ஆடு காணாமல் போகிறது. அதன்பின் என்ன்வெல்லாம் நடக்கின்றன? என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கிறது படம்.
மறைந்த நடிகர் பூஇராம், இந்தப்பாத்திரத்துக்காகவே பிறந்தவர் போல் இருக்கிறார். அவருடைய ஒவ்வோர் அங்க அசைவும் அவ்வளவு இயல்பு. படத்தில் ஆட்டைக் காணாமல் அவர் கதறுகிறார்.படம் பார்க்கும்போது அவர் இல்லையே என நினைத்து பார்ப்போர் கலங்குகின்றனர்.
அவருடைய மனைவியாக நடித்திருக்கும் பாண்டியம்மா அருமை. கணவன் மனைவிக்குள்ளான பாந்தத்தை சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
படத்தில் முக்கியமான வேடத்தை ஏற்றிருக்கும் சிறுவன் தீபன் (பெரியகருப்புத்தேவரின் பேரன், இயக்குநர் விருமாண்டியின் மகன்),உயிர்நேயர்களின் பிரதிநிதி. அறியா வயதின் அளவற்ற பாச உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறான்.
தனிக்கடை போடத்துடிக்கும் காளிவெங்கட் சிறப்பு.படம் இலகுவாக நகர அவர் பெரிதும் உதவியிருக்கிறார்.தொழில் தொடங்க அவர் கடைபிடிக்கும் உத்திகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை.
லட்சுமி, பாண்டி, ஜோதி, ராஜா, கருப்பு, ஆனந்த்,ஜெய், தேவா, சங்கிலி ஆகிய படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
எம்.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவில் தமிழ்நாட்டின் ஒரு கிராமவாழ்க்கை அச்சுஅசலாகப் பதிவாகியுள்ளது.நடிகர்களின் உணர்வுகளையும் தவறவிடவில்லை.
தீசனின் இசையில் பாடல்கள் தாழ்வில்லை.பின்னணி இசை திரைக்கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.ஏகாதசியின் பாடல்வரிகள் நெகிழ்வு.
படத்தைத் தொகுத்திருக்கும் ஆனந்த் ஜெராஸ்டினின் உழைப்பில், சொல்லப்படும் கதை மக்கள் மனதில் பதியும்படி அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ரா.வெங்கட், தீபாவளிப் பண்டிகை வறிய மக்களை எவ்வளவு பாடுபடுத்துகிறது என்பதை மையமாகக் கொண்டு பல்வேறு உளவியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறார்.
பொழுதுபோக்கு அம்சங்கள், அர்த்தம் பொதிந்த காட்சிகள், அழகான பரிமாறல் ஆகியனவற்றை சரிவிகிதத்தில் கலந்துகொடுத்து வரவேற்புப் பெறுகிறார்.
– செல்வன்
இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் பத்தாம்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.











