விமர்சனம்

ஜானி – திரைப்பட விமர்சனம்

ஒரு கதாநாயகன் அவருக்கு நான்கு நண்பர்கள். ஐவரும் இணைந்து பாதி சட்டம் மீதி விரோதமாக ஒரு தொழில் செய்கிறார்கள். அந்தத் தொழிலால் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதன் விளைவாக ஒவ்வொருவராக மர்ம மரணம் அடைகிறார்கள். எப்படி? எதற்காக? என்பதைச் சொல்வதுதான் படம்.

ஐவரில் ஒருவராக இருக்கும் பிரசாந்துக்கு இது வித்தியாசமான வேடம். எந்த உணர்ச்சியையும் காட்டாமல் எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார். கொஞ்சம் எடை கூடியிருக்கிறார்.

அவருடைய கூட்டாளிகளாக பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா மற்றும் ஆத்மா பேட்ரிக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பிரபு, ஆனந்தராஜ் ஆகியோர் வழக்கம் போல இயல்பாக நடித்திருக்கிறார்கள். அஷுதோஷ்ராணா ஏதாவது பெரிதாகச் செய்வார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம். ஆத்மா ஆஜானுபாகுவாக இருந்து மிரட்டுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டி தாரளமாக நடித்திருக்கிறார். பிரசாந்தின் காதலி என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சியிலேயே இன்னொருவரின் மனைவி என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்கள். அது வெறும் அதிர்ச்சிதான், அதற்கு நியாயமாக ஒரு காரணம் படத்தில் இருக்கிறது.

ஷாயாஜிஷின்டே, தேவதர்ஷினி உள்ளிட்டோர் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு தேவையான அளவு இருக்கிறது.

ஜெய்கணேஷின் இசையில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

இந்திப்படத்தின் மொழிமாற்றுப்படம் இது. தமிழில் திரைக்கதை அமைத்து வசனங்களை எழுதியிருக்கிறார் தியாகராஜன். கதைக்குள் இருக்கும் ரகசியங்களை பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தப்படுகிற உத்தி பலவீனம்.

எட்டு இலட்சம் கள்ள நோட்டைக் கலந்தேன் அது எனக்கே திரும்பி வருகிறது என்று ஆனந்தராஜ் சொல்லும் காட்சி உட்பட பல சுவரசியமான காட்சிகள் பலம்.

இயக்குநர் வெற்றிச்செல்வனுக்கு இது முதல்படம். இதில் அனுபவமிக்க நடிகர்களை இயல்பாகக் கையாண்டிருக்கிறார்.

நிறையக் கேள்விகள் கேட்கும் வகையில் படம் இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி பிரசாந்துக்கு சக்தி சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது ஜானி.

Related Posts